உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.
அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு,
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள்,
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக்
கூறுகின்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும்.
இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட,
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.