சிறார் திரைப்படம்: அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம் - THE RED BALLOON
GOOGLE DRIVE LINK👇
https://drive.google.com/file/d/1-6zeHEtmIk32cwgi1ZkbUa2DjsMw8LJU/view?usp=drivesdk
*The Red Balloon*
குழந்தைகள் நேசம் செலுத்தும் பட்டியலில் ஐந்தறிவோ ஆறறிவோ கொண்ட உயிர்கள் மட்டுமல்ல. உயிரற்ற பொருட்களும் கூட அடங்கும். அவ்வகையில் உலகம் முழுக்க குழந்தைகளுக்கு பிரியமான விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. திருவிழா சமயங்களில் அவர்கள் கையில் இருக்கும் பலூன் வெடிக்காமல் வீடு வந்து சேர்ந்தால் அது தான் அவர்களின் அன்றைய பெரிய சாதனையாக இருக்கும். அப்படிப்பட்ட பலூன், குழந்தைகளின் சொல் பேச்சை கேட்கவும் துவங்கினால் அது எத்தனை வேடிக்கையாக இருக்கும். இப்படிபட்ட சில கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்தான் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரெட் பலூன்…
*The Red Balloon (1956)*
ஆறுவயது சிறுவன் பாஸ்கல், பள்ளி செல்லும்போது உயரே தெருஓர தூணில் பறந்து கொண்டிருக்கும் காற்றடைத்த சிவப்புநிற பலூனை பார்க்கிறான். தூணில் ஏறி பலூனை விடுவித்துக் கொண்டு பலூனை கைப்பற்றும் அவன், கையிலிருக்கும் பலூனுடன் பேருந்தில் ஏற முயலும் போது நடத்துநர் “பலூனுக்கெல்லாம் பஸ்ஸில் இடமில்லை” என்பது போல மறுத்துவிடுகிறார்.
அதனால் ஒரு கையில் புத்தகப் பையினையும் ஒரு கையில் சிவப்பு பலூனையும் பிடித்துக் கொண்டே பள்ளிக்கு ஓடுகிறான். பள்ளிக்குள் பலூனுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பள்ளி ஊழியர் ஒருவரிடம் பலூனை ஒப்படைத்துவிட்டு வகுப்பிற்கு செல்லும் அவன் வீடு திரும்பும் போது அதனை பெற்றுக் கொள்கிறான். இப்படி அந்த சிவப்பு பலூன் அவனது தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போகிறது....
மழை பொழியும் சாலையில் குடை பிடித்துச் செல்லும் ஒருவரிடம் தஞ்சம் கேட்டு குடைக்குள் அந்த பலூனை மழையில் நனையாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறான். வீடு வந்ததும் முதல் மாடியில் இருக்கும் பால்கனியில் பலூனை சுதந்திரமாக பறக்கவிட்டு தூங்கச் செல்கிறான். அந்த பலூன் உயிர் பெற்றுவிட்டது போல அவனை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்கிறது.
மறுநாள் காலையில், பள்ளிக்கு கிளம்பும் பாஸ்கலை, காற்றில் மிதந்தபடியே பின்தொடர்ந்து வருகிறது அந்த சிவப்பு பலூன். வழியில் ஒரு மூலையில் அச்சிறுவன் ஒளிந்து கொள்ள பலூன் அவனை தேடி கண்டுபிடிக்கிறது. அதன் பின் அந்த பலூன் ஒளிந்து கொள்ள பாஸ்கல் அதைத் தேடுகிறான். இப்படி பலூனும் பாஸ்கலும் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்...
பலூனுக்கு தான் பஸ்ஸில் அனுமதி இல்லையே. எனவே பாஸ்கல் மட்டும் பேருந்தில் ஏறிக்கொள்ள, பலூன் படுவேகமாக அந்த பேருந்தை பின் தொடர்கிறது. பாஸ்கலை தவிர, மற்ற மனிதர்களுக்கு இந்த காட்சி ஆச்சரியமூட்டுகிறது. குழந்தைகளை பொருத்தவரை பலூன் தங்களிடம் பேசத் துவங்கினால் கூட ஆச்சர்யப்படமாட்டார்கள், காரணம் எந்த ஒரு விளையாட்டுப் பொருளும் அவர்கள் கைபட்டதும் உயிர் பெற்றுவிடுகிறது. பாஸ்கலின் பலூனுக்கு அவன் மீது பெரிய பிரியம் தான். மற்றவர்கள் யாராவது பலூனை பிடிக்க முயன்றால் கைக்கு எட்டாமல் பறந்துவிடும். பாஸ்கல் கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பறந்து வந்து அவன் முன் ஆஜராகிவிடும்...
சாலையில் எதிரே நடந்து வரும் சிறுமி ஒருத்தி நீலநிற பலூனோடு செல்கிறாள். உடனே பாஸ்கலின் சிவப்பு நிற பலூன் அந்த பலூனை பின் தொடர ஆரம்பித்துவிடுகிறது. பாஸ்கல் தன்னுடையதை எடுத்துக் கொண்டு செல்கிறான். உடனே நீலநிற பலூன் சிறுமியின் கையிலிருந்து விடுபட்டு சிவப்பு பலூனை பின் தொடந்து வர சிறுமி ஓடி வந்து தன் பலூனை பெற்று செல்ல என காட்சிகள் மிக குஷியாக குழந்தைகளை மகிழ்விக்கிறது. சிவப்பு நீலத்தையும் நீலம் சிவப்பையும் பின் தொடர வேண்டியது காலத்தின் தேவை அல்லவா..?
இந்நிலையில் உயிர் கொண்டு பறக்கும் பாஸ்கலின் சிவப்பு பலூன் மீது மற்ற சிறுவர்களுக்கு பொறாமை ஏற்படுகிறது. அந்த பலூனை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் பாஸ்கலை அவர்கள் ஒரு குழுவாக இணைந்து துரத்துகிறார்கள். பாஸ்கலும் அவனது பலூனும் அவர்களுக்கு போக்கு காட்டி ஓடுகின்றன. ஒரு கட்டத்தில் குறும்புக்கார சிறுவன் ஒருவன் உண்டி வில்லால் பலூனை அடித்துவிட காயம்பட்ட பலூன் காற்றை இழந்து தரையில் மயங்கி விழுகிறது. சிறுவர்கள் குஷியில் குதிக்கிறார்கள். கொஞ்சம் காற்றை தேக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பலூனை ஒரு சிறுவன் காலால் மிதித்து உடைத்து அதை முற்றிலும் சிதைத்து விடுகிறான்...
தனது பலூனுக்கு நடந்த விபரீத முடிவை பார்த்து பெரும் சோகத்தோடு உடைந்த பலூனின் அருகே அமர்ந்திருக்கிறான் பாஸ்கல். அவ்வூரில் இருந்த மற்ற பலூன்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வருவது போலவும், பாஸ்கலின் சோகத்தை ஈடு செய்ய நினைப்பது போலவும் வானில் படையெடுத்து பறந்து வருகின்றன...
ஹீலியம் நிரப்பப்பட்ட வானவில் கூட்டம் போல நூற்றுக்கணக்கான வண்ண பலூன்கள் வீடுகளின் சன்னல்கள், பலூன் கடைகள், சாலைகள் என நகரின் பல பகுதிகளில் இருந்தும் பாஸ்கலிடம் பறந்து வந்து சேர்கின்றன. பாஸ்கல் அவைகளில் கட்டப்படிருக்கும் கயிறுகளை பிடித்துக் கொள்கிறான். அந்த பலூன்கள் அவனை உயரே தூக்கிக் கொண்டு பறப்பதோடு படம் முடிகிறது. அந்த காட்சி வண்ண தேவதைகள் ஒன்று கூடி ஒரு சிறு குருவியை கவர்ந்து செல்வது போல இருந்தது...
1956ல் வெளியான பிரெஞ்சு நாட்டுத் திரைப்படமான இதை இயக்குநர் ’ஆல்பர்ட் லாம்ரோஸ்’ இயக்கினார். பாஸ்கலாக நடித்த சிறுவனான பாஸ்கல் லாம்ரோஸ், இப்படத்தின் இயக்குநர் ஆல்பர்ட் லாம்ரோஸின் சொந்த மகன். புகைப்படக்கலைஞராக தன் வாழ்வை துவங்கிய இயக்குனர் 40-களின் பிற்பகுதியில் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். 1978-ல் வெளியான “தி லவ்வர்ஸ் விண்ட்” என்ற ஈரானிய ஆவணப் படத்தை இயக்கியபோது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆல்பர்ட் லாம்ரோஸ் இறந்து போனார். அவரது இறப்புக்கு பிறகும் கூட அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அப்படம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி 51-வது ஆஸ்கர் விழாவில் “தி லவ்வர்ஸ் விண்ட்” ஆவணப்படம் கலந்து கொண்டது...
இப்போது இருக்கும் நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்ட படம் போல பிரம்மிக்க வைக்கும் பலூன் காட்சிகளைக் கொண்ட ’தி ரெட்பலூன்’ கேன்ஸ் திரைப்பட விழா, ஆஸ்கர் விருது, பிரிட்டீஸ் அகாடமி ஆப்ஃ பிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட் விருது, நேஷனல் போர்ட் ஆஃப் ரிவ்யூ விருது என குழந்தைகள் கை நிறைய சாக்லேட் அள்ளுவதைப் போல விருதுகளை அள்ளியது. இன்றும் குழந்தைகள் திரைப்பட விழாவில் பலூன் சூடிய மன்னனாக பறந்து கொண்டிருக்கும் ’தி ரெட் பலூன்’ திரைப்படத்தை அவசியம் உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு காண்பியுங்கள்.
நம் நினைவில் மிதக்கும் பலூன்களில் பால்யத்தின் வாசனையல்லவா நிரம்பியிருக்கிறது.