epaper தெரியும் ipaper தெரியுமா?
தகவல் தொழில் நுட்பப் புரட்சி வந்தாலும் வந்தது. எல்லாமே மாற்றத்திற்குள்ளாகிவிட்டது மட்டுமின்றி, நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
அச்சு வடிவில் வந்த செய்தித்தாள்கள், எலெக்ட்ரானிக் பேப்பர் எனப்படும் இபேப்பராக மாறி, இணையதளம் மூலம் டிஜிட்டல் வடிவில் பார்ப்பதாக வந்தன. பெரும்பாலும் இந்த இபேப்பர் பிடிஎப் வடிவில் நமக்கு கிடைத்தன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டர், லேப்டேப் ஆகியவற்றில் இருந்து, நவீன வரவுகளான டேப்லெட், மொபைல் வடிவத்திலும் பார்க்கும் வண்ணம் பார்வைக்கு வந்தன.
பேப்பரில் என்ன வந்திருக்கிறதோ, அது அப்படியே அச்சு பிசகாமல் டிஜிட்டல் வடிவில் பார்வைக்குத் தருவதுதான் இபேப்பர். படிக்க விரும்பும் செய்தியை அல்லது கட்டுரையை தொட்டால் அந்த செய்தி மட்டும் பெரிதாகி, படிப்பதற்கு ஏற்ற வகையில் கிடைக்கும்.
தற்போது இதையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ipaper என்ற ஒன்று வந்திருக்கிறது. (இன்றுதான் எனது பார்வையில் பட்டிருக்கிறது).
internet paper என்பதன் சுருக்கம்தான் ipaper என்கிறது அகராதி. இதில் சிறப்பு என்னவென்றால், பார்ப்பதற்கு epaper போன்று தெரிந்தாலும், ஒரு செய்தியில் ஒரு படம் மட்டும் அச்சாகி இருக்கும் இடத்தில் இடத்தில், அது தொடர்பான படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு அச்சான செய்தித்தாளிலும், இபேப்பரிலும் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றது என்ற செய்தியின் கீழ், கோப்பையுடன் இந்திய அணி இருக்கும் ஒரு நிழற்படம் மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதையே ipaper மூலம் பார்த்தீர்கள் என்றால், அந்த செய்தியின் கீழ், இந்திய அணி பேட்டிங் செய்தது, முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது, வீரர்களின் சந்தோஷ தருணம், கோப்பை வாங்கிய படம் என வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கும்.
இப்போது நாளிதழ் மற்றும் வார இதழ்களில் QR கோடு ஒன்றை கொடுத்து, இதை ஸ்கேன் செய்தால், இது தொடர்பான வீடியோ கிடைக்கும் என்று அறிவித்திருப்பார்கள்.
ipaper-ல் அந்த தொல்லையே இல்லை. வெறும் எழுத்துக்களை மட்டும் கொண்ட செய்தியில் கூட, அச்செய்தியின் மீது ‘வீடியோ பிளே’விற்கான அம்புக்குறி ’பட்டன்’ ஒன்று தெரியும். அதை ‘கிளிக்’கினால் போதும், அந்த செய்திக்கு தொடர்புடைய வீடியோ அப்படியே திரையில் ஓட ஆரம்பிக்கும். (உதாரணத்திற்கு இந்த தகவலோடு வெங்காயம் விலை உயர்வு குறித்த செய்தியில், அதன் வீடியோ இணைப்பு ஓடுவது குறித்த நிழற்படத்தை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். அதைப் பார்க்கவும்)
இணையத்தில் ipaper குறித்து தேடினால், தகவல் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. வாழ்த்துகள் தினமலரே..!
இன்று புதிதாக ஒன்று கற்றுக்கொண்ட மகிழ்வு எனக்கு! உங்களுக்கு..?
- மோ.கணேசன், பத்திரிகையாளர்.
27.09.2019
.................