6 நிமிடத்தில் 196 நாடுகளின் பெயர்கள்! - ஆச்சர்யப்படுத்தும் 2 வயது விழுப்புரம் சிறுவன்
டிக் - டாக், மியூசிகலி, டப்மாஷ் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதே போல் விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நிகில் பிரஜன் தன்னுடைய நினைவாற்றல் மூலமாக எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான். எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் மழலை மொழியில் அந்த நாட்டின் தலைநகரின் பெயரைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தும் நிகில் பிரஜன் ``வொன்டர் ஃஆப் புக் ரெக்கார்ட்’’ ( Wonder of book record) சாதனைப் படைத்துள்ளான். இது தொடர்பாக நிகில் பிரஜன் அம்மா சில்வியாவிடம் பேசினேன்.
சிறுவன் நிகில் பிரஜன்
``நிகிலுக்கு இப்போது 2 வயது ஆகிறது.196 நாடுகளின் பெயர்களையும் 6 நிமிடத்தில் சொல்லி ஆச்சர்யப்படுத்துவான். நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்கள், மாவட்டங்கள் என எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிடுவான். உலக வரைபடங்கள் மூலமாக ஒன்றரை வயதில் விளையாட்டாகக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம். ஒருமுறை கற்றுக்கொடுப்பதை எப்போதும் கேட்டாலும் சரியாகச் சொல்லிவிடும் நினைவாற்றல் அவனுக்கு இருப்பதை உணர்ந்தோம்.
நினைவாற்றல்
அந்த நினைவாற்றலை அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்காக நாடுகளின் பெயர்கள், மாநிலங்களின் பெயர்கள் என அடுத்தடுத்த பயிற்சிகள் வழங்கினோம். அவனும் ஆர்வமாகக் கற்றுக்கொண்டான். அதன் பின் `வொன்டர் ஃஆப் புக் ரெக்கார்டு’க்கு முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் `இளம் சாதனையாளர் நினைவாற்றல் விருது’ கிடைத்தது. நிகிலின் அந்தச் சாதனைக்குப் பின், நிறைய பொது நிகழ்ச்சிகளுக்கு அவனை அழைத்து, அவனின் நினைவாற்றலைப் பாராட்டுகிறார்கள். பாராட்டுகள் நிகிலுக்கு இன்னும் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. அடுத்தகட்டமாகத் திருக்குறள் பயிற்சி வழங்க உள்ளோம். கின்னஸ் சாதனைக்கும் முயற்சி செய்து வருகிறோம். நிகில் நிச்சயம் சாதிப்பான்’’ என தம்ஸ் அப் செய்கிறார் சில்வியா....