ஆறாம் வகுப்புக்கு மேல், குறிப்பாக ஒன்பதாம் வகுப்புக்கு மேலான வளரிளம் பருவத்தினர் (adolescents) குறித்த பிரச்சினைகள் இன்று விடையற்ற கேள்விகளாக நம் முன் நிற்கின்றன. இந்தச் சிறார்கள் வன்முறை, போதைப் பழக்கம், ஆன்லைன் கேமிங் போன்ற சூதாட்டங்களிலும், வேறு பல சுய அழிவு/சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுத் தங்களை இழந்து வருகிறார்கள். கல்வி நிலையங்கள், சமூகம், பெற்றோர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.
வளரிளம் பருவத்தினரைச் சமூக மேம்பாட்டுச் (socially constructive) செயல்களில் ஈடுபடவைப்பது அவர்களுக்குப் பொறுப்பையும் முதிர்ச்சியையும் அளிக்கும். அத்தகைய ஈடுபாடுகள், அவர்களைப் பேயாய்ப் பிடித்தாட்டும் நுகர்பொருள் கலாச்சார மோகம், பகட்டு உலகின் பளபளப்பு, பிறர் மீதான பொறாமை, சுய பச்சாதாபம் போன்றவற்றிலிருந்து காத்து, பொறுப்புடைய மனிதர்களாக்கும். அதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்க விரும்புகிறேன்.
வாசிக்கும் தமிழகம்: பள்ளிகளில் வளரிளம் பருவத்து மாணவர், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்ற மாணவர்களுக்கு வாசிக்கக் கற்றுத் தருவதுதான்அந்தத் திட்டம். தொடக்கக் கல்வி வகுப்பு மாணவருக்கு நன்கு வாசிக்கத் தெரிந்த நடுநிலை வகுப்பு மாணவரோ, உயர், மேல்நிலை வகுப்பு மாணவரோ, அதே வகுப்பில் வாசிக்கத் தெரிந்த சக மாணவரோ யார் வேண்டுமானாலும் கற்பிக்கலாம். தங்களைவிட வயதில் / வாசிக்கும் திறன் குறைந்த மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணி வளரிளம் பருவத்து மாணவருக்கு மிகுந்த பொறுப்பு, பெருமை, நிறைவு, மகிழ்ச்சியை அளிக்கும். அவர்களது வாழ்விற்கு அர்த்தமும் அளிக்கும்.
ஆசிரியரிடமிருந்து கற்பதைவிட மற்ற குழந்தைகளிடமிருந்து, தங்கள் வயதே உடைய, அல்லது வயதில் சிறிது மூத்த குழந்தைகளிடமிருந்து, சிறப்பாகவும் ஆர்வத்துடனும் குழந்தைகள் கற்கின்றனர் என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆகவே இத்திட்டம் கற்பிக்கும் வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து கற்கும் குழந்தைகளுக்கும் பெரும் பலனளிக்கும்.
திட்ட வடிவம்:
# தமிழ்நாட்டின் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒரே சமயத்தில் இதை அறிமுகப்படுத்தலாம்.
# அனைத்துப் பள்ளிகளிலும் 6 – 12 வகுப்பு மாணவர்களில் நன்கு வாசிக்கும் திறன் கொண்ட மாணவரை ஆசிரியர் இனம்காண வேண்டும்.
# அவ்வாறு அறியப்பட்ட மாணவர்களில், மற்ற மாணவருக்குக் கற்பிக்கும் விருப்பமுடைய மாணவருக்குத் தலைமை ஆசிரியர் / ஆசிரியர் அழைப்பு விடுக்கலாம். இந்தப் பணியின் பெருமையையும் பலனையும் விளக்க வேண்டும்.
# திட்டம் வாரம் இரண்டு நாட்கள் நடைபெறும்.
# ஒவ்வொரு ஆசிரிய-மாணவருக்கும் வயதில் சிறிய வகுப்பு மாணவர் 10-15 பேருக்குக் கற்பிக்கும் பொறுப்பை அளிக்கலாம்.
# சிறப்பாகப் பணிபுரிந்து, பல மாணவர்களுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்திய மாணவ-ஆசிரியர்களுக்கு அங்கீகாரம், பாராட்டு, சான்றிதழ் போன்றவற்றை அளிக்கலாம்.
# இந்தச் செயல்பாடு பள்ளி நேரத்திற்குப் பிறகே நடைபெறும்.
# மாணவ-ஆசிரியர், மாணவர் இருவரும் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஊர்/ தெருக்களில் வசிப்பவராதலால், பள்ளி நேரத்திற்குப் பிறகு இந்த வகுப்புகளுக்கு வருவதில் சிரமம் இருக்காது. தற்போது ‘இல்லம் தேடிக் கல்வி’ வகுப்புகள்போல் நடத்தலாம்.
# வகுப்புகள் பள்ளி வளாகத்தில் நடைபெற வேண்டும். பள்ளி வளாகம் மாணவரின் திறன் வளர்க்கப் பயன்படுத்தப்பட வேண்டும். பள்ளி சமுதாயத்தின் சொத்து என்பது அனைவராலும் உணரப்பட வேண்டும்.
# மாணவ-ஆசிரியர், மாணவர் இருவரும் பள்ளி நேரத்திற்குப் பிறகு, சிறிது நேரம் வீட்டிற்குச் சென்றுவிட்டு, பிறகு இந்த செயல்பாட்டுக்கு வரலாம்.
# 1-5 வரை மட்டும் வகுப்புகள் கொண்ட பள்ளிகளில் கற்பிப்பதற்கான உயர் வகுப்பு மாணவர் இல்லையாதலால், அவர்களுக்கு அருகிலிருக்கும் நடு / உயர் / மேல் நிலைப் பள்ளி மாணவர், அருகில் இருக்கும் ஊர்களைச் சேர்ந்தவர்கள் கற்பிக்கலாம்.
# மாணவரின் வயதிற்கு ஏற்ற புத்தகங்களைப் பள்ளி நூலகங்களில் இருந்து ஆசிரியர் / நூலகர் தேர்ந்தெடுத்து, இந்த செயல்பாட்டுக்கு அளிக்கலாம். அதற்கு உரிய தகுதியும் பொறுப்பும் ஆசிரியருக்கு நிச்சயம் உண்டு. அத்துடன், இன்று பள்ளிக் கல்வித் துறை ஒரு பெரும் முயற்சியைச் செய்திருக்கிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டு, கணினியில் ஏற்றப்பட்டு, துறையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. துறை அலுவலகத்திலிருந்தே எந்தப் புத்தகம், எந்த நூலகத்திலிருக்கிறது, யாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இயலும்.
# திட்டம் முழுதும் பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பில் / மேற்பார்வையில் நடைபெறும். இன்றைய தமிழக அரசின் முக்கிய முன்னெடுப்பு பெற்றோர், உள்ளாட்சிகள் இணைந்த, பொறுப்பும் அதிகாரமும் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இயங்கிவருவது. தங்கள் குடும்பத்து இளைஞர்கள் சீரழியாமல் காப்பதில் பெற்றோரும் ஊர் மக்களும் அன்றி, யாருக்கு அதிக அக்கறை இருக்க முடியும்?
# மேலாண்மைக் குழு உறுப்பினர் வாரம் இரண்டு நாட்கள் பொறுப்பினைப் பகிர்ந்துகொண்டோ, அல்லது குழுவின் கல்வியாளர், அவ்வூரைச் சேர்ந்த ‘இல்லம் தேடிக் கல்வி’த் தன்னார்வலர் கண்காணிப்பிலோ திட்டம் நடைபெறும். நூலகரும் விருப்பமுடைய ஆசிரியரும் பங்கேற்றால் கூடுதல் நலம்.
# இந்தத் திட்டத்தால் அரசுக்கு எந்தக் கூடுதல் நிதிச் சுமையும் இல்லை. கற்கும் மாணவர், கற்பிக்கும் மாணவர், கண்காணிக்கும் மேலாண்மைக் குழுவினர் அனைவரும் பள்ளியையோ, அருகமைப் பகுதிகளையோ சேர்ந்தவர். புத்தகங்கள் பள்ளி நூலகம் அல்லது ஊர் நூலகத்தைச் சேர்ந்தவை. செலவு இல்லை. வரவோ அளப்பரியது. தமிழ்நாட்டின் பல லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் அழிவிலிருந்து மீட்கப்பட்டு, ஒளிபடைத்த எதிர்காலம் காண்பர். குழந்தைகள் கற்றல் திறன்பெறுவர். - வே.வசந்தி தேவி கல்வியாளர் , முன்னாள் துணை வேந்தர்
******************************************