HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

வெளிநாட்டு குளிர்பானங்களை புறக்கணிக்கும் மக்கள்: சமூக ஊடகங்கள் மூலம் பெருகும் விழிப்புணர்வு

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்குகள் நல வாரிய அமைப்பான பீட்டாவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் சார்ந்த விளையாட்டு நடைபெறுவதற்கு பெரும் சவாலாகவும், தடையாகவும் இருந்து வருகிறது. எனவே அமெரிக்கா உள்பட வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை வாங்கக் கூடாது போன்ற வாசகங்கள் சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டது. இதே வாசகங்களை ஜல்லிக்கட்டு போராட்ட பாதாகைகளிலும் பரவலாக காண முடிந்தது.
 வெளிநாட்டு குளிர்பானங்களாக பெப்சி, கோக் ஆகியவற்றின் விற்பனையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனவரி 26 முதல் அவற்றை விற்க மாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையனும், மார்ச் 1-ஆம் தேதி முதல் விற்க மாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.விக்கிரமாராஜாவும் கடந்த 23-ஆம் தேதி தெரிவித்தனர்.
 5 நாள்களில் ஏற்பட்ட விழிப்புணர்வு: இந்தநிலையில் சென்னையில் திருவல்லிக்கேணி, கே.கே.நகர், அடையாறு, ஆவடி உள்பட நகரில் முக்கியப் பகுதிகளில் உள்ள குளிர்பான விற்பனைக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளில் கடந்த 5 நாள்களாக பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
 இது குறித்து சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குளிர்பான மொத்த வியாபாரி வி.பி.மணி, ஆவடி பேருந்து நிலையத்தில் குளிர்பான கடை வைத்திருக்கும் வி.அய்யாதுரை ஆகியோர் உள்பட சென்னையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் கூறியது:
 வழக்கமாக எங்களது கடைகளில் தினமும் 15 முதல் 25 பெட்டிகள் அதாவது 250 முதல் 500 பாட்டில்கள் வரை பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையாகும்.
 ஆனால் கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு இரண்டு பெட்டிகள் (48 பாட்டில்கள்) விற்பதே அரிதாக உள்ளது. 200 மி.லி. கொண்ட சிறிய பாட்டில்கள், டின் முதல் 2 லிட்டர் பாட்டில் வரை உள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் அதிகளவில் தேக்கமடைந்து விட்டன.
 வாங்க மறுத்த மாணவர்கள்...: குறிப்பாக மாணவர்கள் பெப்சி, கோக் வாங்குவதை அடியோடு நிறுத்தி விட்டனர். அவர்களிடம் கேட்டால் அந்த குளிர்பானங்கள் உடலுக்கு நல்லதல்ல. அவற்றை வாங்க வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று கூறுகின்றனர். அதேபோன்று எங்கள் குழந்தைகள் இவற்றை விரும்புவதில்லை என்று கூறி பெற்றோரும் வாங்குவதில்லை. மாறாக உள்ளூர் நிறுவனங்களைச் சேர்ந்த சோடா, கலர், குளிர்பானங்களை வாங்கிச் செல்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம், சமூக ஊடகங்கள் மூலம் அதிவிரைவாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இந்த மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என்ற இளைஞர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
 அந்த குளிர்பானங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில் உடலுக்கு கேடு விளைவிக்காத உள்ளூரைச் சேர்ந்த தரமான குளிர்பானங்களை விற்றாலும் நல்ல லாபம் கிடைக்கும். மார்ச் 1-ஆம் தேதி வரை எங்களுக்கு அவகாசம் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் புறக்கணித்ததால் அடுத்த முறை பெப்சி, கோக் குளிர்பானம் எங்களுக்கு வேண்டாம் என விநியோகஸ்தர்களிடம் உறுதிபடத் தெரிவித்து விட்டோம்.
 அரசின் ஆதரவு அவசியம்: வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கக் கூடாது என்பதில் மக்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், நிலம், தண்ணீர் எடுக்கும் அனுமதி ஆகியற்றை அரசு ரத்து செய்வதோடு உள்ளூர் குளிர்பான உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
 இது குறித்து குளிர்பான விநியோகஸ்தர்கள் ராஜா, சதீஷ் ஆகியோர் கூறுகையில், சென்னையின் பல்வேறு கடைகளில் எஞ்சியுள்ள வெளிநாட்டு குளிர்பானங்களை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கடை உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். உள்ளூரைக் காட்டிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களே இங்கு விற்பனையாகும். இதனால் எங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், மக்களின் உணர்வை வரவேற்கிறோம் என்றனர்.
"முழுமையாக வெற்றி பெறுவோம்'
வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதுடன் அதில் முழுமையான வெற்றி காண்போம் என வணிக சங்கங்களின் மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன்: வெளிநாட்டு குளிர்பானங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு விரைவாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது.
 இது இளைஞர்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. முழுமையாக வெற்றி பெறும் வரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
 சில்லறை வணிகத்தைப் பாதிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்க மறுக்கும் மக்களுக்கும், எங்களது கோரிக்கையை ஏற்ற வியாபாரிகளுக்கும் நன்றி. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை அடியோடு நிறுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த தன்னெழுச்சியால் வெளிநாட்டு பொருள்களின் மீதுள்ள மோகம் குறைந்து உள்நாட்டு பொருள்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும்.
 உள்ளூர் குளிர்பான வியாபாரிகளின் உற்பத்தி மேம்படுத்துவதற்கான சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

- தினமணி