HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 8 நவம்பர், 2019

வருட பொதுப்பலன் - ரிஷபம் ( முழு விவரம் )

 ரிஷபம்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உள்ளார்ந்த அன்புடன் எல்லோரையும் நேசிக்கும் நீங்கள், தவறு செய்தால் தாயாக இருந்தாலும் தட்டிக் கேட்பீர்கள். உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த விகாரி ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். பாதியிலேயே  நின்று போன காரியங்கள் உடனே நிறைவேறும். தைரியம் பிறக்கும். புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து சாமான்ய நிலைக்கு முன்னேறுவீர்கள். பேச்சிலிருந்த முணு முணுப்பு, சலிப்பு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இனி குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்கள் கொஞ்சம் அலைச்சலைத் தந்தாலும் வளர்ச்சியையும் தரும்.

மனைவியையும், மனைவி வழி உறவினர்களையும் அனுசரித்துப் போகவேண்டியது வரும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்தபந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களை பெரிதுபடுத்த வேண்டாம். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை சொல்லி சொந்த பந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள்.

விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம் புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வுகள் வந்து செல்லும். உங்களை சிலர் விமர்சிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க சனியும் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவி வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.


திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 2ல் தொடர்வதாலும், 8ல் கேது நீடிப்பதாலும் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதைப் புண்படுத்துவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காது வலி வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

வாகனத்திற்கான லைசன்ஸ், இன்ஸ்யூரன்ஸை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். 05.10.2019 முதல் 28.10.2019 வரைக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் சென்று மறைவதனால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீட்டு பராமரிப்பு செலவுகள், தொண்டைப் புகைச்சல் மற்றும் காய்ச்சல் சளி தொந்தரவு வந்து நீங்கும் 09.02.2020 முதல் 21.03.2020 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8வது வீட்டில் மறைவதனால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதரங்களுடன் சின்னச் சின்னக் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

கன்னிப்பெண்களே! தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே, நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுவலி நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.

மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். தேர்வு சமயங்களில் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். உங்களின் திறமையை பலரும் பாராட்டுவார்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரிகளே! வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசியில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிடுவதை தவிர்க்கப் பாருங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டாலும் இறுதியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பெரிய பதவியில் அமர வேண்டிய நீங்கள் சிலரின் மோசடிகளால் நல்ல வாய்ப்புகளை இழந்தீர்களே, இப்போது உயர் பதவி கிட்டும். நெருக்கடிகள் நீங்கும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலநேரங்களில் தன்மானத்தை விட்டுக் கொடுக்க வேண்டியது வரும். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய சில நிறுவனங்களிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் இருந்த மௌனப் போராட்டம் ஓயும். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்கட்சியினரை தேவையில்லாமல் வசைபாடாதீர்கள்.

கலைஞர்களே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீண் வதந்திகள் வரத்தான் செய்யும். மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் உயரும்.

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரருடன் பாந்தமாகப் பழகுங்கள். வரப்புச் சண்டைகள் வேண்டாம். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். இந்த விகாரி புத்தாண்டு சின்னச் சின்ன ஏற்றத்தாழ்வுகளையும், செலவுகளையும் கொடுத்து வந்தாலும் உங்களின் வளர்ச்சிப் பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும்.

பரிகாரம்:

கடலூர் மாவட்டம், எழுமேடு எனும் ஊரில் அருட்பாலிக்கும் ஸ்ரீபச்சைவாழியம்மனை சென்று வணங்குங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். செல்வம் பெருகும்.


Comments