HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 30 ஜூன், 2019

அத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சிபுரம் - பக்தர்களுக்கு 15 வழிகாட்டுதல்கள்!


40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்! 
1. குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்திவரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல்நாள் அன்றே அத்திவரதரை பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

2.  48 நாள்களிலும் அத்திவரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்பு பூஜையும் நடைபெறாது.

3. காலை 6  முதல் 2 மணி வரை, பிற்பகல் 3 முதல் 8 மணி வரை எனத் தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

4.  அத்திவரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

5.  பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்துக்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22  தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து  மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு எந்திரங்களும் வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில்  6 புதிய சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாகக் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும் கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களில் இருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.....