HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 7 பிப்ரவரி, 2019

மதுவினால் ஏற்படும் தீமைகள்


தமிழகம் இன்று போதையால் தத்தளிக்கிறது. இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாத நாளே இல்லாமல்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் உடலில் உரம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. உடலில் பலம் குறைய குறைய மதுவின் பாதிப்புகள் அதிகமாகி விடும்.

வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் ,நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் கேள்விகள்.

ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.

கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும் என்கிற உச்ச நிலை உருவாகும். இது போன்ற தீவிர இறுதிக்கட்ட நிலைக்கு வந்து விடுவார்கள். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் “குடிநோய்” வரலாம்.

குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்து கொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும்.

கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்.

2000-ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகு வார்.

குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து,மரியாதையும் இழந்து போவார்கள்.

நாண் என்னும் நல்லாள் புறம்கொடுக்கும்,
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப்போய் விடுவாள். பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும்பயனில்லை…!!!

உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகம், மதுவின் தீமையை தெளிவாக விளக்கியுள்ளது. “போதை தரக்கூடிய பொருள்கள் உலகில் ஏராளம் உண்டு.அவைகள் திட, திரவ, வாயு எனும் மூன்று நிலைகளில் கிடைக்கிறது. ஆனாலும் அதிகம் போதை தரக்கூடியது, சமுதாயத்திற்கு பெரிதும் தீங்கிழைப்பது என்று அரசாங்கங்கள் கருதுவது திட வடிவில் உள்ள ஹெரோயின், கோகைன், ஹஷிஸ், கஞ்சா, அபின் போன்றவைகளைத்தான். பெரும்பாலான நாடுகள் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றன.

தமிழ்நாட்டில் ”டாஸ்மாக்” சாராய பாட்டிலை வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்தாலும், அரசுக்கு கவலையில்லை என்ற நிலை காணப்படுகிறது. அதே சமயம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தால் 10 வருட சிறை தண்டனை; அத்துடன் குண்டர் சட்டமெல்லாம் பாயும். ஏனென்றால் அரசின் செல்லப்பிள்ளையாக, வருவாய் ஈட்டித்தரும் மூத்த (குடி) மகனாக மதுவை அரவணைத்து, ஆசீர்வதித்து பட்டி தொட்டிதோரும், கவர்மென்ட் சரக்கை ஆறாக ஓடவிட்டு கஜானாவை நிறைக்கின்றனர். உலகில் நல்ல(குடி)மகனை உருவாக்க ஒவ்வொரு நாடும் பாடுபடுகின்றன. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளின் அரசாங்க கப்பல் மிதப்பது ”தண்ணீ” வருவாயில்தான்.

மது குடிப்பதை எல்லா குடியரசுகளும் சட்டபூர்வமாக்கி மக்களின் நல்வாழ்வை சீரழிக்கின்றன. இவர்கள் பார்வையில், மதுவை விட போதை மருந்துகள் பெரும் தீமையாகத்தெரிகிறது. இவைகளை தடுக்க கடும் சட்டம். ஆனால் பிராந்தி, விஸ்கி,ரம், ஜின், ஒயின் சாராயம் போன்றவை சமுதாய அங்கீகரிக்கப்பட்ட பானமாக ஆராதிக்கப்படுகிறது.

இன்றைய ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மது போதை தாராளமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கு தனித் துறை ஏற்படுத்தி “சேவை” செய்கிறது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 6800 சில்லறை கடைகள் 44000 ஊழியர்கள் 48 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. தெருக்குழாயில் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் ‘டாஸ்மாக்கில்’ தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது.

மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். தள்ளாடித்திரியும் தமிழர்கள் இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமானோர் மதுவால் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இந்த தற்கொலை சாவுகளில் 50% பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே. ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து – பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் – அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.

உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது. அரசே முன்னின்று மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் அரசுக்கு வருடந்தோறும் பண்டிகைக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் பல கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. அரசே இதை ஒழித்தால்தான் மதுவினால் ஏற்படும் சாவையும் குறைக்க முடியும்…!!!.