HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 28 ஏப்ரல், 2018

மீண்டெழும் அரசுப்பள்ளிகள்-புத்தக விமர்சனம்






































ஆசிரியர்: பேரா.நா.மணி

“ஒரு அரசுப்  பள்ளியின் மரணம் என்பது அவ்வூரில் இதுவரை நடந்த மொத்த 
மரணங்களைக் காட்டிலும் துக்ககரமானது” - பேரா.நா.மணி.

• அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிடுக….
• தனித்தனி வகுப்பறைகள்….
• வகுப்பிற்கொரு ஆசிரியர்…
• சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்துக..
• செயல்வழிக்கற்றல், தொடர் மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்துக…
• நலத்திட்ட உதவிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்திடுக…
• கல்வியில் தனியார் மயத்தைக் கைவிடுக…
• அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்துக…
• உண்மையான சமச்சீர் கல்வி முறையினை அமல்படுத்துக…
• மத்திய அரசின், “அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி’  திட்டத்தை நிராகரித்திடுக
…..

இவைதான் இந்நூலின் பிரச்சாரக் கருத்துக்கள். இந்தப் பிரச்சாரக் கருத்துக்காகவே
 இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியுள்ளவர் ஈரோடு கலைக்கல்லூரியின்
 பொருளியல் துறைப் பேராசிரியரான நா. மணி அவர்கள். இவர் தமிழ்நாடு அறிவியல்
 இயக்கத்தின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 

பொதுப்பள்ளிகளான அரசுப்பள்ளிகளின் நலிவு என்பது சமூகத்தின் நலிவு. இன்றைய
 வணிகக் கல்விச் சூழலில் ஏழை எளிய மக்களின் கடைசி புகலிடமாக இருப்பது
 அரசுப்பள்ளிகளே. இந்த அரசுப்பள்ளிகள் மட்டும் தன் இயக்கத்தை நிறுத்திக்
 கொண்டால் கல்வியறிவில்லா அடுத்த தலைமுறை உருவாவதை யாரால் தடுக்க
 முடியும்?

முன்னீடாக என்னும் தலைப்பில் அரசுப்பள்ளிகள் வீழ்ந்து தனியார் பள்ளிகள் 
கோலோச்சுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அழகுற விளக்கியுள்ளார்
 நூலாசிரியர்.

“நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் சீர்குலைந்ததில் அல்லது
 சீர்குலைக்கப்பட்டதில் அரசு, ஆசிரியர், ஊடகங்கள், பொதுமக்கள் என 
அனைவருக்கும் பங்குண்டு. அரசின் பங்கு சற்று கூடுதல் என வேண்டுமானால்
 வைத்துக் கொள்ளலாம். தனியார்மயம் என்பதைவிட வணிகமயம், பள்ளிக்கல்வி
 முழுவதிலும் வியாபித்துள்ளது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி முறையையும்,
 பள்ளிக்கல்வி தரத்தையும் அது முற்றிலும் சீரழித்துவிட்டது. இன்று சற்றேறக்குறைய
 2000 அரசு தொடக்கப்பள்ளிகள் சாவின் விளிம்பின் உள்ளதாய் கூறுகிறார்கள். 
ஒரு பள்ளியின் மரணம் என்பது அவ்வூரில் இதுவரை நடந்த மொத்த மரணங்களைக்
 காட்டிலும் துக்ககரமானது. அரசுப்பள்ளிகளின் மரணம் எந்நாளும்
 இயற்கையானதல்ல. திட்டமிட்டு நிகழ்த்தப்படும் படுகொலை என்று
 கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இனி அக்கிராமத்தில் பிறக்கப் போகும்
 ஒவ்வொரு குழந்தையையும் தனியார் பள்ளியை நோக்கியே விரட்டுவது
 அல்லது மீண்டும் எழுத்தறிவற்ற சமூகத்தை உருவாக்குவது என்ற மோசமான
 நிலைக்கு இட்டுச் செல்லும்” என்ற சமூகப்பேரவலத்தை முன்னுணர்ந்து காமராசர்
 கட்டமைத்த பொதுப்பள்ளிகளை மீட்டுவாக்கம் செய்வதில் ஆசிரிய சமுதாயம்
 ஆற்ற வேண்டிய கடமைகளை சிறு சிறு கட்டுரைகளில் இந்நூலில் விளக்கியுள்ளார்.
இக்கட்டுரைகளில் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகளில் தங்களது தனித்துவமான
 செயல்பாடுகளால் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில்
 உயர்த்திய ஆசிரியர்களைப் பற்றிய அழகான பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
 இவர்களை நமக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நம்மையும் அரசுப்பள்ளிகளை
 பாதுகாக்கும் அரும்பணி ஆற்றிட ஊக்கப்படுத்துகிறார்.

• நாமக்கல் மாவட்டம் ஊத்துப்புளிக்காடு பள்ளியின் செயல்பாடு.
• ஈரோடு நகராட்சி துவக்கப் பள்ளி.
• கரூர் நரிக்கட்டியூர் பள்ளி.
• காஞ்சிபுரம் உத்திரமேரூர் நடுநிலைப் பள்ளி.
• கன்னியாகுமரி மாவட்டம் பூச்சிவிளாகம் தொடக்கப்பள்ளி
என மாணவர்களின் எண்ணிக்கையை தங்களது தனித்துவமான செயல்பாடுகளால்
 வெகுவாக உயர்த்திய ஆசிரியர்களையும், பள்ளியையும் பற்றி இந்நூல் வழியாக
 நாம் அறிந்து கொள்ளும்போது நமக்கும் ஊக்கம் பிறக்கிறது. உதாரண
 ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி மற்ற ஆசிரியர்களையும் செயல்பட வைக்கும்
 உத்தியின் மூலம் இந்நூலானது சிறப்புறுகிறது. மேலும் மாணவர்கள்
 எண்ணிக்கையை உயர்த்த பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்காமல் 
சோர்ந்து போயிருக்கும் ஆசிரியர்களுக்கும். 32 பக்கங்களே கொண்ட
 இச் சிறுநூல் உற்சாகமளிக்கும்.வாசித்துப் பாருங்களேன்.
நன்றி!

புத்தகம்: மீண்டெழும் அரசுப் பள்ளிகள்
ஆசிரியர்: பேரா.நா.மணி
வெளியீடு : அறிவியல் இயக்கம்& பாரதி புத்தகாலயம் (2014)
விலை:15/- பக்கங்கள்:32.

நன்றி

இராமமூர்த்தி .
..................................................................................................................................................................