HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 9 ஏப்ரல், 2018

அரசு பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த பாடங்கள் தமிழ் வீடியோ மூலம் கற்பிப்பு: ஓர் நம்பிக்கை ஒளி....

சான் பிரான்சிஸ்கோ: சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் பெருமளவு இல்லாததால் படிப்பறிவு வேகமாக பரவுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது தமிழகம் முழுதும் அரசு பள்ளிகள் பெருவாரியான கிராமங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எளிதாக ஆகிவிட்டது. ஆனால் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனை நகர் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கல்வி தரத்தின் வேறுபாடு தான்.

உலகத் தரம் வாய்ந்த கல்வி

உலகத் தரம் வாய்ந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுதும் உள்ளது. 2006ம் ஆண்டு சல்மான் கான் என்ற அமெரிக்கர் இணையதளம் மூலம் பல்வேறு கணிணி மென்பொருள் கொண்டு பாடங்களை உருவாக்கி தன்னுடைய உறவினர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவரது உறவினர்கள் அதை எளிதாக புரிந்து கொண்டு அதை தனது தோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டனர். பல பேர் அதை உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், சல்மான் கான் தரம் வாய்ந்த பாடங்களை உலகில் உள்ள அனைவருக்கும் சென்றடைய கான் அகாடமி என்ற அமைப்பை தொடங்கி அதை உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தார். கூகிள், AT&T போன்ற நிறுவனங்களும் பேரளவு நிதி உதவி செய்து அனைத்து பள்ளி பாடங்களையும் காணொளிகளாக ஆங்கிலத்தில் தயார் செய்ய உதவின. தற்போது அமெரிக்க SAT, GMAT தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி வீடியோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் , தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், படிக்கவும், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயார் செய்யவும் கான் அகாடமி வீடியோக்களை பார்ப்பது வழக்கம்.

வெற்றிவேல் அறக்கட்டளை

கான் அகாடமியின் வீடியோக்கள் மற்றும் இணையதளம் இந்தி மற்றும் வங்காள மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழில் இல்லாமல் இருந்தது. கான் அகாடமியில் உள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் முழுமையான வலைதளத்தை தமிழில் மொழி பெயர்க்கும் சீரிய பணியை வெற்றிவேல் அறக்கட்டளை எடுத்து செய்து வருகிறது. வெற்றிவேல் அறகட்டளையின் நோக்கம் பற்றி திரு சொக்கலிங்கம் கூறுகையில், கான் அகாடமி வீடியோக்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனைத்து தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாட திட்டங்களை எளிதில் விளங்கும் படி தமிழ் காணொளி மூலம் அளித்து, அவர்களை உலகத் தரம் வாய்ந்த அறிவு சார் பொருளாதாரத்தில் போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டும் என்பதே என்றார்.

இதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சில ஆயிரம் வீடியோக்களை முழுமையாக தமிழ் மொழியாக்கம் செய்வதும், வலை தளத்தில் இருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழ் மொழி மாற்றம் செய்வதும் மிகவும் கடினமான காரியம். இதற்கு பல்லாயிரம் மனித நேரங்களும் , பொருட்செலவும் ஆகும். இந்த சீரிய பணியை வெற்றிவேல் அறகட்டளை எடுத்து செயல்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குறியது.

தற்போது வெற்றிவேல் அறக்கட்டளை கான் அகாடமி பாடத் திட்டங்களை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்பு வாரியாக வரிசை படுத்தியுள்ளது. தற்போது IIT போன்ற தேர்வுக்கு தேவையான பயிற்சி கூட கான் அகாடமி வீடியோக்களில் வர தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை முழுமையாக முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சென்றால் தற்போது தமிழகத்தில் நகர் புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூட எட்டாகனியாக இருக்கும் IIT படிப்பு , கிராமப்புறத்தில் தமிழ் வழி படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் கான் அகாடமியின் பயன் தெரிய வந்துள்ளது. வெற்றிவேல் அறக்கட்டளை, சான் பிராசிஸ்கோ தமிழ் மன்றம் நிதி உதவியுடன் Team India அமைப்பின் உதவியுடன் கான் அகாடமி தமிழ் படுத்தபட்ட வீடியோக்களை தமிழகத்தில் உள்ள சுமார் 10 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மற்றும் டிவி கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கான் அகாடமி வீடியோ காட்டப்படுகிறது. அதனால் பயன் பெறும் மாணவர்கள், ஆசிரியர் துணை இல்லாமலேயே கடினமான பாடங்களை காணொளி மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது என்கின்றனர். இது அவர்களது கல்வி தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் உதவுவோம்

ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவ வழி செய்து உள்ளோம். கான் அகாடமியை தமிழ் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கவும், எதிர் காலத்தில் பல மாணவர்கள் தனது தாய் மொழி (தமிழ்) வழி கல்வி தொடர வழி வகுக்கவும் வாய்ப்பாக இருக்கும். இந்த பணியை முழுமையாக செய்து முடிக்க பல தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் இந்த சேவைக்கு செலவிட்டாலே மாபெரும் மாற்றத்தை நாம் கொண்டு வர முடியும். நீங்கள் தன்னார்வலாராக உதவ விரும்பினால் info@vetrivelfoundation.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் Corporate Social Responsibility மூலம் உதவ முன் வந்தாலும் வெற்றிவேல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.