HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 12 நவம்பர், 2017

ஆசிரியர்கள் கூடி அலங்கரித்த பள்ளி

"எதிர்காலத்தைச் சரியாகக்  கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்."
-ஓஷோ

தமிழ்நாட்டில்
அரசுப்பள்ளிகள்,  ஆசிரியர்கள் குறித்த மக்களின் நிலைப்பாடு முற்றிலும் நேர்மறையானதல்ல.

இந்த சிக்கலுக்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிகொண்டிருக்கும்  வேளையில் சத்தமில்லாமல் ஒரு  அரசு துவக்கப்பள்ளி பொலிவுபெற்று வண்ணங்களால் மின்னுகிறது.

தேனிமாவட்டம் கூடலூரில் (புதூர்)ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை ஆசிரியர்கள் கூடி மீட்டெடுத்திருக்கிறார்கள்.

பல தன்னார்வ அமைப்புகள் அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றன. அதில் இது புதுமாதிரியான முயற்சி.  அரசை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்காமல் விடுமுறை தினங்களில் செய்து முடித்த சாதனை.

*செயல் அது ஒன்றே சிறந்த சொல்.*

திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிபவர் இராஜசேகரன். விடுமுறைக்கு சொந்தவூர் வந்த வேளையில்
தற்செயலாய் நண்பர் ஒருவர் சொல்லி இப்பள்ளிக்குள் சென்று பார்த்திருக்கிறார்.

 அந்த பகுதியின் தேவையுணர்ந்து தன் அணியுடன் பேசி பள்ளியில் தலைமையாசிரியர்,  ஆசிரியர்களுடன் சந்தித்துப்  பள்ளியின் பராமரிப்பு குறித்து விவாதித்துள்ளனர்.
மிக முக்கியமாக தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல தேவைகள் பட்டியலிடப்பட்டது. ஆகும் செலவுகள் கணிக்கப்பட்டன.

தோராயமாக 150000₹•

அடிப்படைகளைப் பூர்த்தி செய்வதோடு கற்கும் சூழலை இனிதாக உருவாக்குவதில் முனைப்பாக இருந்தனர்.

வகுப்பறைச் சுவர்களுக்கு வண்ணமேற்றுவது,  ஏற்ற ஓவியங்களை வரைவது,  பாதுகாப்பான  விளையாட்டு மையம், பசுமைப்பூங்கா உள்ளிட்ட  குழந்தைகளின் உளவியலை உணர்ந்து பள்ளியைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது.


ஏற்கனவே  இப்பணியைப் பக்கத்து ஊரான Kk பட்டியில் நிகழ்த்தியது யாவரும் அறிந்ததே. அந்த நம்பிக்கையில் உடனே ஒப்புக்கொண்ட ஆசிரியர்கள் ஆளுக்கு பத்தாயிரமென தலைமையாசிரியரோடு இணைந்து நாற்பதாயிரம் தர முன்வந்தனர். அதே அளவு பணத்தை அணிசார்பாக செலுத்துவதாக முடிவெடுத்து வேலைகள் காலாண்டு விடுமுறையில் ஜரூராக தொடங்கியது.

இப்பள்ளியில் படித்து
இன்று நல்ல நிலையிலிருக்கும்  பலரை தேடிக்கண்டறிந்து திட்டமிடல் தெரிவிக்கப்பட்டது.

வேலைகளை நேரில் பார்க்க புரவலர்கள் அழைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் நிதியாக இல்லாமல் பொருளாகப் பெறப்பட்டது.

வேலையாட்கள் முழுதும் அத்தொழில் செய்து வரும் நபர்கள் இல்லை. முழுக்க உள்ளூர் இளைஞர்கள்.  சில நிபுண பணிகளுக்கு மட்டும் உரிய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.


மற்றபடி ஒரு நாளைக்கு 30 பேர் என இளைஞர்களை அனுப்பி வைத்து உதவியிருக்கிறார் திரு.அழகேசன். அப்பகுதியில் ராணுவத்தேர்வுக்கு பயிற்சி மையமும் உடற்பயிற்சி கூடமும் நடத்துபவர் .
உடலை ஆரோக்கியமாக்க ஜிம் நடத்தும் இவர் ஊரையும் ஆரோக்கியமாக்கி வருகிறார்.

காலாண்டு விடுமுறைதான் பள்ளி பராமரிப்புக்குச் சரியான காலம். மாணவர்கள் இருக்கப்போவதில்லை என்பது மட்டுமில்லை ஒருங்கிணைக்கும் அணி முழுக்க அரசு பள்ளி ஆசிரியர்களே. . இவர்களும் வந்துகூட வசதியாக இருந்தது.

ஆசிரியர்கள் சீனிவாசன், ராஜிவ், அழகேசன், சுரேஷ் கண்ணன் , முன்னாள் மாணவர் ஜெயக்குமார் ஆகியோர் ஏழுநாளும்   சொந்த வீடு கட்டவதுபோல் பரபரத்து பள்ளியிலேயே கிடந்தனர்.

சக ஆசிரியர்களின் பணி பாரத்தை பகிர இராஜேஷ் கண்ணன் , மதன் குமார்,வசந்த்  உள்ளிட்ட உள்ளூர் நண்பர்கள்  வந்திணைந்து கொண்டனர்.


இதில் கொண்டாடத்தக்க 4 விசயங்கள்:

1.
மிகநுட்பமான, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு.

2 .
நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தன் செலவில் வேலையைத் தொடங்கி நடத்திக் கொண்டிருப்பது. வேலையை பார்த்துவிட்டு நிதி வழங்குவார்கள் என்கிற ஆணித்தர நம்பிக்கை.

3. அந்த 7நாள்களும் இரவு பகல் பாராத இளைஞர்களின் உழைப்பு.

4.
வண்ணச்சுவர்களும்,  வரைந்த ஓவியங்களும்.

பள்ளிக்கூடத்தை கலைக்கூடமாக்கிய ஓவியஆசிரியர்கள் சின்னமனூர் முருகன், கம்பம் பாண்டியன் மற்றும் சித்தேந்திரன்.

தெருவில் போகும் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்.

பள்ளி திறந்த பின்னும் மீதமிருந்த சில வரையும்பணிகள் அடுத்தடுத்த சனி ஞாயிறுகளில் முடிக்கப்பட்டன.

ஆசிரியர்களின் விடுமுறைநாட்கள் குறித்து கிண்டலாய் எழும்  இணையதள மீம்ஸ்களுக்கு இச் செயல்பாடு - நெத்தியடி.

 இவ்வளவு அளப்பரிய பணிக்கு பின் பள்ளி திறந்ததும் நுழைந்த மாணவர்களுக்கு பேரதிர்ச்சி.! வண்ண ஓவியங்களோடு தனது புது வீட்டில் குதிக்கிறார்கள். இனி அவர்களின் கற்றலும் இனிதாகும்.

ஊரிலிருப்போரும் இந்த கனவுப் பள்ளியை வந்துபார்த்த வண்ணம் உள்ளனர்.

அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை அதிகரிக்கும் எனும் நம்பிக்கை அப்பள்ளியைச்சுற்றி வசிக்கும் கால்நடைகளுக்குக் கூடத் தெரியும்.

இல்லாததால் தானே தனியாரை நாடுகிறார்கள். இனியெல்லாமிருக்கு...வாங்க. . . அழைக்கிறது அரசுப்பள்ளி.!


தற்போது இது அரசுப்பள்ளி மட்டுமல்ல மக்கள் பள்ளி.

பத்து நாளில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொணர முடிந்த இந்த அசாத்தியமான அணி தொடங்கியிருப்பது. . .
 "அரசுப்பள்ளியைக்  காப்போம் இயக்கம் "

முக நூலில் இவ்வியக்கத்தின் பணிகளை கவனித்து தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்து தொடர்புகொண்டு பேசிவருகின்றனர். அருகாமையிலுள்ள சில பள்ளிகளில் இச்செம்பணி தொடங்கி விட்டதாய் கேள்வி.  . .
அதற்குள் நம்ம இயக்கம் அடுத்த அரையாண்டு விடுமுறையில் அலங்கரிக்க ஒரு அரசு  பள்ளியைத் தேர்ந்தெடுத்து விட்டது.

இயக்கம் என்பதற்கான அர்த்தம் தொடர்ந்து இயங்குவது தானே . . .


எனக்கு ரெட்டை மகிழ்ச்சி. ஒன்று நானும் இவ்வியக்கத்திலிருப்பது.
இரண்டாவது நீங்களும் இவ்வியக்கத்தை
உங்கள் பகுதியில்  தொடங்க இருப்பது. . .