HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 15 ஜூலை, 2017

திறமைகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி: அசத்தி வியப்பில் ஆழ்த்தும் மாணவர்கள்...

மழலை பேசி மயக்கும் பிஞ்சு குழந்தைகளின் கல்விப்பயணம், துவக்கப்பள்ளிகளில் தான் துவங்குகிறது. துவக்க கல்வி நன்றாக அமைந்து விட்டால், அவர்களது பயணம் சரியான பாதையில் செல்லும்.மாணவர்களுக்கு துவக்க கல்வியோடு, அவர்களது ஒழுக்கம், திறமைகள் போன்றவற்றை வளர்ப்பதும் ஒரு கடமை தான் என எண்ணி செய்து வருகின்றனர் பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.


பொள்ளாச்சி அருகே போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. முற்றிலும் கிராமப்புறத்தை சேர்ந்த இந்த பள்ளியில், 104 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தமிழ் வழி கல்வியோடு, ஆங்கில வழி கல்வியும் இப்பள்ளியில் உள்ளது. கல்வியோடு, மாணவர்களது மற்ற திறமைகளையும் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஆசிரியர்களிடம் ஏற்பட்டதால், கூட்டு முயற்சியாக செயல்பட்டு அவர்களது செயல்களை ஊக்குவித்து வருகின்றனர்.

தமிழ் இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஓவியம் வரைதலுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுமட்டுமின்றி நாட்டுப்புற கலைகள் என அவர்களது திறமைகளுக்கு உரமிட்டு வருகின்றனர் ஆசிரியர்கள்.கணினி வழிக்கல்வியில் அசத்தும் மாணவர்கள், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தினையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.


தோட்டக்கலை பயிற்சி

சிறுவயதில் கல்வியோடு, இயற்கை விவசாயம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தோட்டம் அமைக்கப்பட்டு, அதனை பராமரித்து வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள். தோட்டத்தில், மூலிகைச்செடிகளும் அமைத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.இதன் தாக்கமாக, கண்காட்சி போட்டிகளில், 'பல்லடுக்கு பயிர் தோட்டம்' அமைப்பு குறித்து விளக்கும் வகையில், மாதிரி தயாரித்து பரிசுகளையும் வென்று குவித்துள்ளனர்.


களப்பயணம்

ஆண்டுதோறும் மாணவர்களை களப்பயணமாக அழைத்துச் சென்று, வரலாற்று சிறப்புகளை எடுத்து கூறி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். இவ்வாறு பல்வேறு பணிகளை செய்து வரும் ஆசிரியர்கள், அவர்களது உடல் ஆரோக்கியத்திற்காக யோகா கலையை சொல்லி கொடுத்து வருகின்றனர்.


யோகா..

யோகா கலை சிறப்பு ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், நன்றாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சக மாணவர்களுக்கு அதனை ஆசிரியர்கள் உதவியுடன் சொல்லி கொடுத்து அசத்துகின்றனர். வாரந்தோறும் புதன் கிழமையில், தியான வகுப்பு, வெள்ளிக்கிழமைகளில் கூட்டு உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தினசரி பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு முறையான பயிற்சி பெற்ற மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்வதில்லை. பஸ்கிமோத்தாசனம், புஜபீடாசனம், சலபாஷனம், பாதஉட்கட்டஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை சர்வசாதாரணமாக செய்து காண்பிக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த சர்வதேச யோகா தினத்தில், மாணவர்கள் மண்பானை மீது யோகா செய்து, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இவர்களது யோகா திறமையை கண்ட பலரும் பாராட்ட தவறவில்லை.

'உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் யோகா கலையை கற்க ஆர்வம் உள்ளது. இந்த கலையை கற்றுக்கொள்ளும் போது, கடினமாக இருந்தாலும், பழக பழக எளிதாக இருந்தது. இது படிப்பிற்கும் மிகுந்த உதவிகரமாக உள்ளது,' என மாணவர்கள் தெரிவித்தனர்.


இசையிலும் ஆர்வம்

பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி கூறியதாவது:

யோகா கலை மாணவர்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. யோகா பயிற்சி மாணவர்களிடையே அமைதி, நல்லொழுக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் கூட்டு முயற்சி ஈடுபாடு தான் மாணவர்கள் திறமைகள் வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது.

மாணவர்கள் யோகா கலை மட்டுமின்றி, நாட்டுப்புற கலைகளையும் நன்றாக பயின்று வருகின்றனர். இசையிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மாணவர்கள் முதல் படியான துவக்க கல்வியிலேயே அவர்களுக்கு கல்வியோடு இதுபோன்ற திறமைகளை வளர்ப்பது அவர்களது உதவிகரமாக இருக்கும் என எண்ணினோம். அதனை ஆசிரியர்கள் உதவியோடு செயல்படுத்தி வருகிறோம்.

பள்ளியிலிருந்து செல்லும் மாணவர்கள் அனைத்து திறமைகளோடு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். இது சிறு முயற்சிதான். வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால், தனியார் பள்ளிகளிலிருந்து கூட மாணவர்கள் எங்களது பள்ளியை நோக்கி வந்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.