HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 18 ஜூலை, 2017

மாணவர் - ஆசிரியர் இடையேயும் சமத்துவம் வேண்டும்!..அரசுப்பள்ளியில் ஓர் ஆச்சர்ய ஆசிரியர்

இந்தியாவின் எதிர்காலம் ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில்தான் உருவாகிறது என்றார்கள் அறிஞர்கள். நாட்டின் எதிர்காலம் மட்டுமின்றி ஒரு தனிமனிதனின் எதிர்காலமும் அதே பள்ளியில்தான் உறங்கிக்கிடக்கிறது. அதைத் தட்டி எழுப்புகிற வல்லமை ஒரு ஆசிரியருக்கு மட்டுமே உண்டு. 

கல்வியின் அவசியத்தை உணர்ந்துகொண்டாலும் அரசுப்பள்ளிகளின் மீது இன்னமும் சமூகத்தின் பார்வை பாரபட்சமாகவே உள்ளது. தனியார் பள்ளிகளே அவர்களின் பார்வையில்  தனித்துவம் பெற்றிருக்கிறது. குறைந்தபட்சம் என்ஜினீயராவது ஆகிவிடுவார்கள் என்பதால் எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பிராய்லர் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கவே விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் அரசுப்பள்ளிகள் காற்றாடாமல் இருக்கச் செய்யும் மொத்த சிரமும் அரசுக்கும் ஆசிரியர்கள் மீதும் ஏற்றப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் மீது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள மதூர் அரசுத் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், மாணவர்களைப் பள்ளியுடன் ஒன்றிப்போகச் செய்ய ஒரு புதுவழியை செயல்படுத்திவருகிறார். மாணவர்கள் அணியும் பள்ளி யூனிஃபார்மையே தானும் அணிந்து பள்ளிக்கு வருகிறார் தினமும். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இது மாணவர்கள் மற்றும் ஊர்க்காரர்களிடையே ஒருவித பிணைப்பை உருவாக்கியிருக்கிறது. 
ஸ்ரீதரன்தலைமை ஆசிரியர் ஸ்ரீதரனிடம் பேசினோம். “என் சொந்த ஊர்  மதுராந்தகம். போலியோவினால் சிறுவயதிலேயே என் இடது கால் ஊனமாகிவிட்டது. உடல் குறைபாட்டைக்காரணம் காட்டி என்னை வீட்டில் முடக்கிவிடாமல் என் பெற்றோர் என்னை படிக்க ஊக்குவித்தனர். ஆசிரியர் பயிற்சிப் படித்து ஆசிரியரானேன். 14 வருடப் பணிக்குப்பிறகு கடந்த 3 வருடங்களாக மதூர் அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசியரியராகப் பணியாற்றிவருகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். எந்த மனிதனுக்கும் உடை என்பது அவனை எடைபோடப் பயன்படும் முதல் விஷயம். சிறுவயதில் வழக்கறிஞர் ஆவது என் லட்சியமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இருந்தாலும் சிறுவயதிலிருந்தே நான் வெள்ளை சட்டை கறுப்பு பேன்ட் உடையைத்தான் அணிந்துவந்தேன். ஒருவரது உடை எதிராளியின் மனதில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு.
அதைத்தான் இப்போது பள்ளி விஷயத்தில் செயல்படுத்த முடிவெடுத்தேன்.
பொதுவாக அரசுப்பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு பெரிய அபிப்பிராயம் இருப்பதில்லை. அது அவர்கள் தவறில்லை. அரசுப்பள்ளிகளின் தரம் குறித்து அப்படி ஓர் அழுத்தமாக அபிப்பிராயம் அந்தக்காலம் முதலே இருக்கிறது. பெற்றோர்களின் இந்த எண்ணத்தை மாற்ற என்னாலான முயற்சிதான் இந்த யூனிஃபார்ம் யோசனை.  எல்லோரும் சமம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவே காமராஜர் பள்ளி மாணவர்களுக்கு ஒரேமாதிரியான உடை திட்டத்தை கொண்டுவந்தார். இப்போது தான் அணியும் அதே உடையை ஆசிரியரும் அணிவதைப்பார்க்கிற மாணவனுக்கு ஆசிரியருடன் இன்னமும் இணக்கமான நட்பு உருவாகும். இருவருக்கும் இடையிலான இடைவெளி குறையும். 
இறுக்கமான ஒரு உணர்வு தவிர்க்கப்பகிறது. அவர்கள் உடையையே நாமும் அணிவதால் அவர்கள் எளிதாக நம்மிடம் ஒன்றிப்போகிறார்கள். மாணவர்கள் மனநிலை ஒருபக்கம் என்றால், தினமும் நான் பள்ளிக்குப் பேருந்தில் வரும்போது என்னைப் பார்க்கிற பெற்றோர்கள் சகஜமாக உரையாடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள். இது பள்ளியின் சூழல் ஆரோக்கியமாக மாற உதவுகிறது.
எனக்கு முன்னரே ஈரோட்டில் ராமமூர்த்தி என்ற ஆசிரியர் இப்படி மாணவர்களின் யூனிஃபார்மில் வருவதாகக் கேள்விபட்டிருக்கிறேன். இம்மாதிரி முயற்சிகள் அரசுப்பள்ளிகளின் மீதுள்ள அபிப்பராயத்தை மாற்ற முயன்றால் அதுவே எனக்கு சந்தோஷம் என்றார்.
எங்கும் எதிலும் புதுமையான சிந்தனையைச் செயல்படுத்த விரும்பும் ஸ்ரீதரன் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டவர். மனைவி வங்கிப்பணியாளர். வெள்ளையனே வெளியேறு நடந்த தினத்தில்தான் தனது திருமணத்தை நடத்தியிருக்கிறார். பள்ளியிலிருந்து மாணவர் யாரேனும் நின்றுவிட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களின் மனதை மாற்ற முயல்கிறார் ஸ்ரீதரன். போலியோ பாதிப்பு பற்றிய விழிப்புஉணர்வு இல்லாததால் தன் இடது காலை இழந்துவிட்டதாகக் கூறும் ஸ்ரீதரன் ஆண்டுதோறும் போலியோ தடுப்பு ஊசி போடப்படும் தினத்தன்று எந்த வேலையானாலும் ஒதுக்கிவிட்டுத்  தானே தன் சொந்த செலவில் ஆட்டோ, மைக் இவற்றை ஏற்பாடு செய்துகொண்டு தங்கள் பகுதியில் பிரசாரம் செய்வார் என்கிறார்கள். “செலவை மட்டும் பார்த்துக்கொண்டு வேறு ஆட்களை பிரசாரத்திற்கு அனுப்பலாம். ஆனால் போலியோ பாதித்த காலோடு நான் செய்கிற பிரசாரம் பெற்றோர்களின் மனதில் அழுத்தமாகப் பதியும். அதற்காகவே எந்த வேலையானாலும் தவிர்த்துவிட்டு நானே பிரசாரம் செய்வேன்.” என நெகிழ வைக்கிறார் ஸ்ரீதரன்.
“அரசுப்பள்ளி மாணவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் வராது என்ற அபிப்பிராயத்தை மாற்ற விரும்புகிறேன். இன்றும் எங்கள் பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்துவிட்டு  6 வது படிக்க பக்கத்து ஊர் பள்ளிக்குப் படிக்கச் செல்லும்போது அவர்களின் ஆங்கிலத்திறமையைப் பார்த்துவிடடு என்னைச் சந்திக்கிறபோது அதைச் சொல்லிப் பாராட்டுவார்கள். 
ஸ்ரீதரன்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகத் திறமையானவர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருவித இணக்கமான சூழல் உருவாகி ஆசிரியர்கள் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினால் அரசுப்பள்ளிகளை அடித்துக்கொள்ள ஆளிருக்காது. சமீபத்தில்தான் எனக்குத் திருமணம் ஆனது. பிறக்கும் குழந்தையை இதே அரசுப்பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என இப்போதே என் மனைவியிடம் சத்தியம் வாங்கிவிட்டேன்” என சன்னமான குரலில் சிரிக்கிறார் ஸ்ரீதரன். 
'மாற்றத்தை நீங்கள் விரும்பினால் அதை முதலில் உங்களிடமிருந்துதான் துவங்கவேண்டும்' என்பார்கள். ஸ்ரீதரன் செய்துவருவது அதைத்தான். வாழ்த்துகள் ஸ்ரீதரன்!