HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 10 ஜூன், 2017

"அரசுப் பள்ளியில் படிக்கிறேன்னு சந்தோஷமா சொல்லு!" மகளுக்கு அப்பாவின் நம்பிக்கை!...

தனியார் பள்ளியில் அட்மிஷன் கிடைக்கவில்லை, கட்டணம் அதிகமாக இருக்கிறது... எனப் பல காரணங்களால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழல் பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு. தனியார் பள்ளியில் சேரப்போகிறோம் எனும் ஆசையில் இருக்கும் பிள்ளைகள் அரசுப் பள்ளி என்றதும் சோர்ந்துவிடுவார்கள். அப்படித்தான் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பூங்குழலியும் சுணக்கமானார். பூங்குழலியின் அப்பா மருதுபாண்டியனுக்கு இது தெரியவந்தது. உடனே அவர் தன் மகளுக்கு புதிய நம்பிக்கையும் கொடுத்தார். அது குறித்து அவரிடம் பேசினோம். (மேலே உள்ள படத்தில்: மருதுபாண்டியன் மற்றும் பூங்குழலி)

"நான் சொந்தமாக பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். நானும் என் மனைவியும் அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். நல்லாத்தான் இருக்கோம். எங்களோட மூத்த மகள் பூங்குழலி, தனியார் பள்ளியிலதான் படிச்சா. ஸ்கூலுக்குப் போகனும்னா காலையில ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்ல ரெடியா இருக்கணும். அப்படின்னா எத்தனை மணிக்கு எழுந்திருச்சி, தயாராகணும்னு பார்த்துக்கோங்க... அதே போல சாயந்தரம் அவ வர்றதுக்கு ஐந்தரை, ஆறு மணியாயிடும். ரொம்ப டயர்டாத்தான் வருவா. அப்பறம் ஹோம் வொர்க்கும் நிறைய தந்திருப்பாங்க. அதையெல்லாம் முடிச்சிட்டு தூங்கத்தான் நேரம் இருக்கும்.
பூங்குழலி மேடையில நல்லா பேசுவா. நிறைய போட்டிகளில் கலந்துப்பா. நாள் முழுக்க பிஸியாகவே இருந்தா கலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது இல்லையா... அவளுக்கு விருப்பமான விஷயங்களையும் செஞ்சாதானே ஸ்கூலேயும் சந்தோஷமா இருப்பா. அதனாலதான் எங்க ஊரு அரசுப் பள்ளியிலேயே சேர்த்துட்டேன். இந்தப் பள்ளி எங்க வீட்டுலேருந்து நடந்து போற தூரம்தான். அதனால் நிறைய நேரம் கிடைக்கும். அரசுப் பள்ளியில சேர்க்கப்போறதை முதலில் என் மனைவிகிட்ட சொல்லி புரிய வைச்சேன். பிறகு, பூங்குழலியிடம் சொன்னேன். அவ 'ஓகே'னு சொன்னப்பறம்தான் இந்தப் பள்ளியில சேர்த்தேன். எங்களோட இரண்டாவது பொண்ணு கயல்விழி இந்த வருஷம் தனியார் பள்ளியில அஞ்சாவது படிக்கிறா. அவளையும் அடுத்த வருஷம் பூங்குழலி படிக்கிற பள்ளியிலேயே சேர்க்கப்போறேன்.
முதல் நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்த பூங்குழலியிடம் 'ஸ்கூல் எப்படி இருக்கு'னு கேட்டேன். 'நல்லா இருக்குப்பா, ஆனா டாய்லெட்தான் சுத்தமாக இல்லை. மத்தப்படி சூப்பரா இருக்கு'னு சொன்னாள். 'சரி, உனக்கு நிஜமாகவே இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா'னு கேட்டேன். அவள் தயங்கிட்டே, 'பிடிச்சிருக்குப்பா, ஆனா, யாராவது எங்க படிக்கிறனு கேட்டா, ஃபேமஸான ஸ்கூலில் படிச்சிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேனு சொல்றதுக்கு கூச்சமாக இருக்குப்பா'னு சொன்னாள்.


அவளோட பிரச்னையைப் புரிஞ்சிகிட்டேன். 'நீ நினைக்கிறது தப்பில்ல, ஏன்னா, பிரைவேட் ஸ்கூலில் படிக்கிறதுதான் பெருமையான விஷயம்னு எல்லார் மனசுலேயும் இருக்கு. அதுதான் தப்பு. இப்ப கவர்மென்ட் காலேஜ்ல டாக்டருக்கு படிக்கிறதுக்கு சீட் கிடைச்சா கூச்சப்படுவியா?னு கேட்டேன். அவள் இல்லைனு தலையாட்டினாள். 'சரி, கவர்மெண்ட் ஆபிஸில் வேலை கிடைச்சா அதை மத்தவங்க கிட்ட சொல்லும்போது கூச்சப்படுவியா'னு கேட்டேன். அதற்கு அவள், 'இல்லப்பா சந்தோஷமா சொல்லுவேனு' சொன்னாள். 'அதுபோலத்தான் குழலி இது. கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதையும் சந்தோஷமா சொல்லு. யாராவது உங்கிட்ட கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதைப் பத்தி நக்கலாக விசாரிச்சா, உங்களுக்கு கவர்மென்ட் வேலைக் கிடைச்சாலும் இப்படித்தான் நினைப்பீங்களானு தைரியமா கேளு'னு சொன்னேன். அவளும் சிரிச்சிகிட்டே 'சரி'னு சொன்னாள்.  
பிரைவேட் ஸ்கூலில் பீஸ் கட்டலைனா வெளியில நிற்க வெச்சிடுவாங்க. அரசுப் பள்ளியில அப்படி இல்ல, புத்தகம், யூனிஃபார்ம்னு எல்லாம் கிடைக்கும். வசதி இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எல்லார் வீட்டிலேருந்து பிள்ளைகள் வருவாங்க. நல்லா பழகுவாங்க. நீயும் அவங்களோடு சந்தோஷமாப் பழகு. டீச்சரைப் பார்த்து பயப்படாமல் பேசு. இன்னைக்கு பெரிய வேலையில இருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர் அரசுப் பள்ளியில படிச்சவங்கதாம். அதனால அரசுப் பள்ளியில படிக்கிறதுல எந்தக் கூச்சமும் படாதே. உங்கூட படிக்கிற புள்ளைங்க யாராவது, அப்படி நினைச்சா நான் சொன்னதையெல்லாம் சொல்லு'னு முடிச்சப்ப, பூங்குழலி தெளிவாகிட்டாள். " என்றார் மருது பாண்டியன்.
புதிதாக சேர்ந்த பள்ளிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பூங்குழலியிடம் பேசினோம். "இந்த ஸ்கூல் எனக்குப் பிடிச்சிருக்கு அங்கிள். அந்த ஸ்கூலுக்கு போகும்போது காலையில ஆறு மணிக்கு எழுந்திருப்பேன். அவசரம் அவசரமாக கெளம்புவேன். இப்பவும் ஆறு மணிக்குத்தான் எழுந்திருக்கிறேன். மெதுவாக, ரிலாக்ஸா கெளம்பறேன். நானே நடந்து ஸ்கூலுக்குப் போயிடுறேனு சொன்னேன். அப்பாதான் ஒரு வாரம் மட்டும் நானே கொண்டு வந்து விடுறேனு சொன்னாங்க. ரெண்டே நாள்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க." என உற்சாகமாகச் சொல்கிறார்.
அரசுப் பள்ளி என்பது நமது அரசு நடத்தும் பள்ளி எனும் உணர்வு வந்தாலே இந்தக் கூச்சம் விலகிவிடும். தன் மகளுக்கு மிகச் சரியாக வழிகாட்டும் அப்பாவுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.