HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 17 ஏப்ரல், 2017


மதிப்பெண் மட்டுமா தனியார் பள்ளிகளின் மதிப்பீடு?

தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
தமிழகத்தில் 2016-17 ஆம் கல்வி ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்காக மெட்ரிக். பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், அந்தந்தப் பகுதியில் முன்னணியில் இருக்கும் பள்ளிகளில் இடம் பெறுவதற்காக மக்கள் பிரதிநிதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரையிலான சிபாரிசுக்காக காத்திருக்கும் சூழலும் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் திறனை மட்டுமே குறை கூறிக்கொண்டு தனியார் பள்ளிகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள், அங்குள்ள சுகாதார வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து சிந்திப்பதில்லை. அனைத்தும் இலவசமாக கிடைக்கும் அரசுப் பள்ளிகள் மீது ஆயிரம் குறை சொல்லும் சமூகம், மெட்ரிக். பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்தாலும், எவ்வித கேள்வியும் கேட்க முடியாமல் தயங்கி நிற்கிறது.
பள்ளிக் கட்டடங்களுக்கான விதிமுறைகளில் சில: வகுப்பறைகள் 400 சதுர அடியில் அமைத்தல். 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தரைத் தளத்தில் மட்டுமே வகுப்பறைகள். 20 மாணவர்களுக்கு 1 குழாய் வீதம் குடிநீர் குழாய்கள். அதேபோல் கை, கால் கழுவுவதற்கும் 20 மாணவர்களுக்கு 1 குழாய் வசதி. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை. 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை. மாணவர்கள் அமரும் இருக்கைகள் (நாற்காலிகள்) முதுகு சாய்வகம் உள்ளதாக இருத்தல்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் 3 ஏக்கர், பேரூராட்சிகளில் 1 ஏக்கர், நகராட்சியில் 10 கிரவுண்ட், மாநகராட்சியில் 6 கிரவுண்ட், மாவட்டத் தலைநகரங்களில் 8 கிரவுண்ட் வீதம் விளையாட்டு மைதானம் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அவற்றை பெரும்பாலான மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. குறிப்பாக, பல பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், சில பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு சிறுநீரக நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மெட்ரிக். பள்ளிகளைப் பொருத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது, சுகாதாரச் சான்று, தீ தடுப்புச் சான்று, கட்டட உரிமச் சான்று, கட்டட உறுதிச் சான்று உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வழங்குகிறது. இந்த சான்றுகள், சம்பந்தப்பட்ட துறையினர் முறையான ஆய்வு மேற்கொள்ளாமலே வழங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
செயல்படாத அன்னையர் பள்ளி பார்வைக் குழு: அதிகாரிகளை விட தங்கள் குழந்தைகளின் நலனில் பெற்றோருக்கு அக்கறை உள்ளது என்பதால், அன்னையர் பள்ளி பார்வைக் குழு உருவாக்கவும் அரசு விதிமுறைகளை உருவாக்கியது.
அதன்படி, மாணவ, மாணவிகளின் தாய்மார்கள் வாரத்தில் ஒருநாள் 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று, பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள், மீண்டும் பார்வையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சமூக ஆய்வில் கண்டறியப்படும் குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று சரிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் நுழைவுவாயிலோடு திருப்பி அனுப்பப்படுகின்றனர். பார்வையாளர் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய சமூக ஆய்வு குறிப்புகள் பற்றியும் யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டுமே தனி மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பிற மாவட்ட மெட்ரிக். பள்ளி ஆய்வாளர்கள், கூடுதல் பொறுப்பாக 1 அல்லது 2 மாவட்டங்களை நிர்வகித்து வருகின்றனர். அரசுக்கு அனுப்ப வேண்டிய புள்ளி விவரப் பட்டியலை சேகரித்து வழங்குவதே இவர்களின் முக்கியப் பணியாக மாறிவிட்டது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
இந்தப் பணிகளுக்கிடையே, பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்ல முடியாது. இதில், அன்னையர் பள்ளிப் பார்வைக் குழு செயல்படுவது குறித்தெல்லாம் ஆய்வு நடத்தி கேள்வி எழுப்ப வேண்டுமெனில் மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படுவதோடு, மாவட்ட வாரியான அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.