HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 10 ஏப்ரல், 2017


‘நான் ஸ்கூலுக்கு போகக் கூடாதா..?' ஆசிரியர்களிடையே வைரலாகும் குறும்படம்

ஒரு மனிதரை கல்வி உயர்த்ததைப் போல வேறு விஷயம் ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், நமது சமூகத்தில் பொருளாதாரம், சாதி என எவ்வளவு விஷயங்கள் ஒருவர் கல்வியை அடைந்துவிடாமல் தடுக்கின்றன. இவையெல்லாம் தகர்ந்து அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான நடத்தப்பட்ட போராட்டம் நீண்ட நெடியது. போராட்டம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. இன்றைக்கும் அது தொடர வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் மட்டுமே இதற்கான முயற்சிகளை எடுத்தால் போதாது. சமூகம் பழமை வாதத்தன்மையிலிருந்து மாற வேண்டும்.
சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தவறான கருத்துகளை மாற்றினால் மட்டுமே கல்வி எல்லோருக்குமானதாக மாறும். கற்பதற்காக ஒருவர் எடுக்கும் முயற்சிகளை மனதார வரவேற்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'காழ்' எனும் குறும்படம் ஆசிரியர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 'காழ்' எனும் சொல்லுக்கு உறுதி எனும் பொருள். ஒரு சிறுவனின் உறுதியைக் கூறும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது 'காழி' இந்தக் குறும்படம்.
குப்பைகளைப் பொறுக்கி, அதை விற்று வரும் பணத்தைக் கொண்டு வாழும் ஒரு ஏழைச் சிறுவன் பற்றியக் கதை. அந்த ஏழ்மையிலும் அவனின் நேர்மையும் கல்விக்கான விருப்பமும் அதற்காக அவன் எடுக்கும் முயற்சியைப் பற்றியுமே இந்தப் படம் பேசுகிறது. இதில் அந்தச் சிறுவனாக நடித்திருக்கும் நவீன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறான். கதையை முழுமையாகச் சொல்லிவிட்டால், படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடலாம்.
'காழ்' குறும்படம் உருவானதற்கு முதன்மையான காரணமானவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மோ.ஜான் ராஜா. காட்டுமன்னார்குடியின் அருகே உள்ள வெங்கடேசபுரம் எனும் சிறிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்.
"புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கேமராவைக் கொண்டு எப்படி புகைப்படங்கள் எடுப்பது எனச் சொல்லிகொடுப்பது வழக்கம். எப்படி கோணங்கள் வைப்பது, வெளிச்சம் எந்தப் பக்கத்திலிருந்து இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் சொல்லும்போது மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள். அதிலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நவீன் கற்பூரம்போல, சொல்வதை அப்படியே பட்டென்று பற்றிக்கொள்வான். நவீன் கூச்சமின்றி பேசவும் நடிக்கவும் செய்தான். அவனைப் பார்த்ததும்தான் எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்த குறும்பட ஆசை துளிர் விட்டது.
நண்பர் சுரேஷிடம் என் விருப்பதைச் சொன்னபோது, அவரும் என்னுடன் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்து படத்திற்கான வேலைகளைச் செய்தோம். கல்விப் பற்றிய படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். எளிமையான கதைத்தான் என்றாலும் இதை திரும்ப திரும்ப நமது சமூகத்தில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தோம். அதனால் நவீனை வைத்து துணிவோடு 'காழ்' படத்தைத் தொடங்கினோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நவீன் சிறப்பாக நடித்தான். நாங்களே வசனத்தை மாற்றிக்கூறி விட்டாலும் அவன் சரி செய்யும் அளவுக்கு படத்தோடு ஒன்றி விட்டான். 7 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காலை ஆறரை மணியிலிருந்து எட்டரை மணி வரை மட்டுமே நடிக்க வைத்தோம். அதனால் நவீன் மட்டுமல்ல எங்களின் வழக்கமான வேலைகள் ஏதும் பாதிக்க வில்லை. படம் பார்த்தவர்கள் எல்லோரும் நவீனின் தாயாக நடித்திருப்பவர் நிஜமாகவே கண் தெரியாதவரா எனக் கேட்கிறார்கள். கண் பார்வையுள்ளவர்தான் அவர். ஆனால், பார்வையாளர்கள் இப்படிக் கேட்கும்விதத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
எங்கள் ஊரில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறோம். சின்னஞ்சிறு குறைகள் இருக்கலாம். ஆனால், படம் சொல்லும் விஷயம் தெளிவாக சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். எந்தக் காரணத்தினாலும் ஒருவருக்கு கல்விக் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பம். இந்தச் செய்தியை மக்களிடையே கொண்டுச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தை நண்பர் சுரேஷ் இயக்க, நான் ஒளிப்பதிவு செய்தேன்.  இப்போது ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகள் எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது." என்கிறார் ஆசிரியர் ஜான் ராஜா.
கல்விக்காக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தொடர வேண்டும்.