HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017


தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

லட்சங்களைக் கொட்டி கொடுத்து, எல்.கே.ஜி அட்மிஷன் பெறுவதற்காக, தனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப் போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக, போட்டி போட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
அட்மிஷனுக்காக காத்திருக்கும் குழந்தைகள்
நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன் அந்த அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் குவிய, ''மன்னிச்சுக்கங்க... 75 பிள்ளைகளுக்குத்தான் இடம் இருக்கு. மத்தவங்க கோவிச்சுக்காம வேற பள்ளியில் முயற்சி செய்து பாருங்க'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள் வருத்தமான முகத்துடன் கிளம்ப, அட்மிஷன் முடிந்த 75 குழந்தைகளோடும் பல்சுவை நிகழ்ச்சிகளோடும் உற்சாகமான தொடக்க விழா நடந்தது. அந்தப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விழாவைத் தொடங்கி வைக்க, 75 மாணவர்களுக்கும் வண்ண வண்ண பலூன்கள், ஆளுக்கொரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் விழாவில் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தனை அதிசயங்களும். 
அரசுப் பள்ளி குழந்தைகள்
"நாங்கள் இந்தப் பள்ளியில் வேலைப் பார்த்தபோது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையே பத்து பேருதான். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன வித்தைகளையோ செய்துப்பார்த்தோம். இந்தப் பள்ளி கரூர் நகரில் இருந்து மூன்று கிலோமீட்டரில் துரத்திலேயே இருப்பதால், எல்லோருமே நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத்தான் சென்றார்கள். இந்தப் பள்ளியையே 'சிங்கிள் டிஜிட் பள்ளி' என்றுதான் அழைப்பார்கள். சேர்க்கை குறைவாக இருக்கிறது எனச் சொல்லி அதிகாரிகளும் பள்ளியை மூடிவிட இருந்தார்கள். ஆனால், இன்று மொத்தமாக 300 பிள்ளைகளைப் பார்க்கும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. தனியார் பள்ளி மாயையை கிழித்தெறிந்திருக்கும் நாள் இது'' என்று மகிழ்ந்தார்கள் முன்னாள் ஆசிரியர்கள். 
பெற்றோர்
கூட்டத்தில் பேசிய சில பெற்றோர்கள், "பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்தப் பள்ளியை கடந்துசெல்லும்போதுகூட நிமிர்ந்து பார்த்ததில்லை. ஆனால், பள்ளியில் நடந்த மாற்றங்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள், கற்பிக்கும் முறைகள் பற்றி மெல்ல பிரின்ஸிபால்மெல்ல கேள்விப்பட்டு எங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆரம்பித்தோம். எங்கள் பிள்ளைகள் அழகாக ஆங்கிலம் பேசுவதையும், தெளிவாகத் தமிழ் எழுதுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கம்ப்யூட்டர், யோகா, இசை, விளையாட்டு, நடனம் என எல்லா வகையிலும் எங்கள் பிள்ளைகளின் திறமைகளை வளர்த்தெடுக்கிறார்கள். எங்களுக்கு ஒரு ரூபாய் செலவில்லை'' என்று நெகிழ்ந்தார்கள். 
அரசுப் பள்ளியின் மீது 200 சதவிகித நம்பிக்கையைச் சாத்தியமாக்கிய இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி? 
பள்ளியின் தலைமை ஆசிரியையான விஜயலலிதா, ''அர்ப்பணிப்பும் சக ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும்தான் காரணம். ஒவ்வொரு ஆண்டும் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசுவோம். அவர்களுக்குப் பள்ளியின் மீது நம்பிக்கை வருவதற்காக, அரசு மற்றும் தனியார் ஆர்வலர்களின் நிதியுதவியில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினோம். குழந்தைகளைக் கவரும் வகையில் வகுப்பறைகளிலும் ஓவியங்கள் வரைந்தோம். ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையையும் ஊக்கப்படுத்தி, நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கினோம். இவையெல்லாம் சேர்ந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியது. இப்போது, ஆண்டுதோறும் பெற்றோர்களே பள்ளிக்கு சீர் வரிசை எனச் சொல்லி விழா நடத்தி உதவி வழங்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறோம். இந்தப் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையையும் எங்கள் குழந்தையாக நினைத்து அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுகிறோம்'' என்கிறார் புன்னகையுடன். 
ஒவ்வொரு அரசுப் பள்ளியும் இதுபோன்ற முயற்சியில் இறங்கினால், ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்