HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 5 ஏப்ரல், 2017


400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்! அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!
சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம், நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்டார். இவரது அப்பா அப்துல் ஹமீத் பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, இந்தச் சிறுவனும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.
ஒரு கட்டத்தில் கற்கும் திறனும் தட்டச்சுத் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றன. அறிவாற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட்டபோது, `அக்ரம் இயல்பான குழந்தை இல்லை’ என்பதை பெற்றோர் புரிந்துகொண்டனர். அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்க ஊக்கப்படுத்தினர்.
5-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களோடு மொழிகளையும் கற்று வந்தார். நானூறு மொழிகள் கற்றுக்கொண்ட பிறகு, வழக்கமான கல்வியிலிருந்து விலகி மொழியியலில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்தார். இந்தியக் குழந்தைகள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட இஸ்ரேலியக் குழந்தைகள் வெகு வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால், இப்போது இஸ்ரேலியப் பள்ளியில் ஆன்லைன் மூலம் படித்துவருகிறார் அக்ரம், ஹீப்ரு மொழி தெரிந்ததால் மட்டுமே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்கிறார் அவர்.
சரி, எப்படி அவர் கற்றுக்கொண்டார்? எழுத்துகளைக் கற்கும் முன் அகர வரிசை எழுத்துகளையும் பட எழுத்து களையும் தன்னுடைய மூளையில் துல்லியமாகப் பதிவு செய்துகொள்கிறார். பிறகு சொற்களைப் படிக்கிறார். பொருள் புரிந்துகொள்கிறார். இப்படி நானூறு இந்திய, உலக மொழிகளில் மூன்று லட்சம் எழுத்துகளை மூளையில் பத்திரப்படுத்தி இருக்கிறார் இந்த அசாத்திய சிறுவன். தற்போது இரண்டு முதல் நான்கு நாட்களில் ஒரு மொழியைத் தன்னால் கற்றுவிட முடியும் என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் அக்ரம்.
அந்தந்த மொழி தெரிந்தவர்களோடுதான் பேச முடியும் என்பதால், அக்ரமால் சரளமாகப் பேச முடியாது. மொழி தெரிந்தவர்கள் கேள்வி கேட்டால், புரிந்துகொண்டு பதிலளிக்கிறார். ஸ்பானிஷ், பிரெஞ்சு, தமிழ், அரபிக், ஜப்பானிய மொழிகள் மிகவும் விருப்பமானவை என்று சொல்லும் அக்ரம், சீனம், தாய், கொரிய மொழிகள் கடினமானவை என்கிறார்.
நினைவாற்றலை இழக்காமல் இருப்பதற்காக வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை, பதப்படுத்தப்பட்ட பால், நொறுக்குத் தீனிகள், சாக்லேட், ஐஸ்க்ரீம், காபி, டீ போன்றவற்றைகூட அக்ரம் சாப்பிடுவதில்லை. `ஒரு குழந்தையாக ஐஸ்க்ரீமையும் சாக்லேட்டையும் சாப்பிடமால் எப்படி இருக்க முடிகிறது’ என்று கேட்டால், “அவற்றைச் சாப்பிட்டால் என் நினைவாற்றல் குறைந்துவிடுமோ என்ற பயம்தான் காரணம். அதனால் நான் மட்டுமல்ல, என் வீட்டில் யாரும் இவற்றைச் சாப்பிடுவதில்லை” என்கிறார். சிறுதானிய உணவுகளும், தாகம் எடுத்த 4 நிமிடங்களுக்குள் தண்ணீர் பருகுவதும், தினமும் சுடோகு பயிற்சி எடுத்துக்கொள்வதும் நினைவாற்றலுக்கு நல்லது என்று டிப்ஸும் கொடுத்தார் அக்ரம்.
யூனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், 2014-ம் ஆண்டு `World's Youngest Multi Language Typist’ என்ற விருதை இவருக்கு வழங்கியிருக்கிறது. 75 நிமிடங்களில் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி முடித்ததன் மூலம் ‘Indian Achiever Book of Records’ விருதையும் பெற்றிருக்கிறார். இந்தச் சாதனையைச் சரிபார்ப்பதற்கே மூன்று மாதங்கள் தேவைப்பட்டதாம். நானூறு மொழிகளைப் பரிசோதிக்கக்கூடியவர்கள் கிடைக்காமல் கின்னஸ் சாதனை இன்னும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது!
‘ஆழமாகச் சில மொழிகளையாவது கற்க வேண்டாமா’ என்று கேட்டால், “அதுதான் தன்னுடைய லட்சியம்” என்கிறார். “சில மொழிகளில் நிபுணத்துவம் பெற்று, தமிழின் தலைசிறந்த படைப்புகளை உலக மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதைத் தவிர, மொழிகளைப் பயிற்றுவிக்கும் மொழியியல் வல்லுனராகவும் இருப்பேன். அதனால்தான் தென்னாப்பிரிக்கா எனக்கு அளித்த குடியுரிமையை மறுத்துவிட்டேன். நான் பிறந்த தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று உறுதியாகச் சொல்லும் மஹ்மூத் அக்ரம், தன்னைப் போன்ற குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் வலம்வருகிறார்!