HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி''

''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி''




தனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்துகாட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.

சமீபத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு கள் வெளியாகின. அதில் அகில இந்திய அளவில் 152- வது ரேங்க் பெற்று வெற்றி பெற்ற வான்மதி, அரசுப் பள்ளி மாணவிகளின், ‘ரோல் மாடலாக’ மாறியுள்ளார். அப்பா சென்னியப்பன் கார் ஓட்டுநர். அம்மா சுப்புலட்சுமி இல்லத்தரசி. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களில் ஒன்றுதான் வான்மதியின் குடும்பம்.
''ஒரு தீப்பொறி''
சத்தியமங்கலம் அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பு. அப்போதுதான் இந்தச் சாதனைக்கான முதல் வித்து ஊன்றப்பட்டுள்ளது. பள்ளி விழாவில் அப்போதைய ஈரோடு ஆட்சியர் உதயசந்திரன் பங்கேற்ற நிகழ்வுதான் வான்மதியின் இன்றைய சாதனைக் கான முதல் படிக்கட்டாக அமைந்தது.
அந்த நாளை வான்மதி நினைவுகூரும்போது, “எங்க பள்ளி விழாவில் பங்கேற்கக் கலெக்டர் வர்றார்... கலெக்டர் வர்றார்னு ஒரே பரபரப்பா இருந்துச்சு. கலெக்டர் என்ற அதிகாரிக்குக் கிடைத்த மரியாதை என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. இவர் கல்வியால் உயர்ந்தவர். நன்றாகப் படித்தால் கலெக்டரைப் போல் மரியாதைக்குரிய பதவிகளுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உதயசந்திரன் கல்வியை வலியுறுத்தியதும் என் மனதில் நிலையாய் நின்று விட்டது.
கல்வியால் எந்த நிலையையும் மாற்ற முடியும் என்று என் பள்ளி ஆசிரியர்கள் போதித்த கருத்துக்கு, ஒரு ‘தீப்பொறி’ போல இந்தப் பள்ளி விழா அமைந்தது” என்று நினைவுகளில் மூழ்கினார்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றியடைந்த பிறகு, அதே பள்ளி வளாகத்தில் ஒரு சிறப்பு விருந்தினராக வான்மதி பேசியபோது கண் கலங்கியுள்ளார்.
''சாதனையின் படிக்கட்டுகள்''
பள்ளிப் படிப்புக்குப் பின் பி.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரித் தோழியின் அப்பாவான சுங்க இலாகா அதிகாரி பாலசுப்பிரமணியனின் நம்பிக்கையான வார்த்தைகள் வான்மதியை அடுத்த படியில் ஏற்றி வைத்துள்ளன. ‘எனது ஐ.ஏ.எஸ். ஆசை சாத்தியமானதுதான் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, எளிய குடும்பத்தில் இருந்து கலெக்டரானவர்கள் குறித்த பத்திரிக்கைச் செய்திகளைக் காட்டி, கனவுக்கு உரமிட்டவர் இவர்’ என்று நெகிழ்ச்சியாய்ப் பதிவு செய்தார் வான்மதி.
2010- ம் ஆண்டு முதல் சென்னை வாழ்க்கை. 2011- ல் முதலிரண்டு கட்டங்களில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கைகூடவில்லை. உங்களிடம் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் திறமை இருக்கிறது என்று சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் இயக்குநர் சங்கர் நம்பிக்கையளித்துள்ளார்.
கார் டிரைவரான அப்பாவிடம் இருந்து வரும் சிறு தொகையில் தலைநகரில் வாழ முடியாத நிலை யில், அகாடமியிலேயே இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணிபுரிந்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக ஆண்டுதோறும் தேர்வுகளை எழுதி வெற்றிக்கான கதவுகளைத் தொடர்ந்து தட்டியுள்ளார்.
''உதவிய கரங்கள்''
‘‘விடுதியில் தங்க, தேர்வுக்குச் செல்ல எனச் செலவுகளைச் சமாளிக்கவும், நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து தேர்வுகளை எதிர்கொள்ளவும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் பாக்கியதேவி, விவேகானந்தன், ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு ஆகியோர் உதவினர். இரண்டு ஆண்டுகள் அகாடமியில் பயிற்சியாளராக இருந்தது எனக்குத் தனித்தன்மையை உருவாக்கித் தந்தது.
கற்பித்தல்தான் கல்வி முறையின் உச்சகட்டம் என்பதை உணர முடிந்தது. படித்துப் புரிந்து கொண்டு, அதனை மற்றவர்களுக்குப் புரிய வைப்பது என்பது எளிதானதல்ல. கடைசியாக 2014- ல் நான்காவது முயற்சியில் எனது நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்தப் பயிற்சியாளர் பணி பெரிதும் உதவியாய் இருந்தது’’ என்று தனது வெற்றிக்கான பாதையையும் பயணத்தையும் விளக்குகிறார் வான்மதி.

‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற பாரதியின் வரிகளைப் போல வானதியின் சாதனை உணர்வு இருந்துள்ளது. அத்தகைய உயர்வான லட்சியத்தோடு வான்மதியைப் போன்று முயற்சிகளைத் தொடர்ந்தால் இளைய தலைமுறையின் அனைத்துக் கனவுகளும் மெய்ப்படும்.