HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 20 நவம்பர், 2016

முளையிலேயே கிள்ளவேண்டிய குழந்தைகளின் பிடிவாதம் - விகடன்


‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..
‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!
தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’
- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.
‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.
‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.
‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.
மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.
எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.
சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..
‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
உஷார் மம்மீஸ் உஷார்!
குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..
குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.
குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.
குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!
சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.
நன்றி - விகடன்