HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 22 அக்டோபர், 2016

சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ??

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. புதிய தலைவரை நியமிப்பதில் தாமதம் அரசு நிர்வாக முடக்கத்தையே உணர்த்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் அதிமுக்கியத்துவமும் அவசரமும் நிறைந்த விஷயங்களில் அதிமுக அரசு எவ்வளவு அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் செயல்படுகிறது என்பதற்கு தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிப்பதில் செய்யப்படும் தாமதம் தான் சிறந்த உதாரணமாகும். இக்குழுவின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு கடிவாளம் போடும் வகையில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழுவை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதன்பயனாக, கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 2009ஆம் ஆண்டில் நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையை இக்குழு முற்றிலுமாக கட்டுப்படுத்தவில்லை என்றாலும், ஓரளவு மட்டுப்படுத்த உதவியது.
இக்குழுவின் தலைவராக நீதிபதி சிங்காரவேலு நியமிக்கப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் வரைமுறையின்றி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டன. இக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி சிங்காரவேலு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது.
தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் கடந்த கல்வியாண்டுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கான புதிய கட்டண விகிதங்கள் கடந்த மே மாதத்திற்கு முன் நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் பதவி காலியாக இருந்ததால் புதிய கல்விக்கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை.
இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள் லட்சங்களில் கட்டணம் வசூலித்தன. சென்னையில் சில தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் சேர்க்க ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இக்கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி பா.ம.க பல போராட்டங்களை நடத்தியது. பொதுமக்களும் போராடினர்.
ஆனாலும் எப்பயனும் ஏற்படவில்லை. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அனுமதிக்கும் நோக்குடன் திட்டமிட்டே கட்டண நிர்ணயக் குழுவுக்கு தலைவரை அரசு நிர்ணயிக்கவில்லை என்று தோன்றுகிறது.
நடப்பாண்டில் மேலும் பல ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முடிவுக்கு வருவதால் அவற்றுக்கும் புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இப்போதே தொடங்கப்பட்டால் தான் மே மாதத்திற்கு முன்பாக புதிய கட்டண விகிதங்களை அறிவிக்க முடியும். ஆனால், கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.
இதுதொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த 3-ஆம் தேதி தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் வாதிட்ட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், "தமிழகத்தில் தற்போது நிலவும் சூழல்கள் காரணமாகத் தான் குழுவுக்கு புதிய தலைவரை நியமிக்க முடியவில்லை" என்று கூறினார். தமிழகத்தில் அப்படியென்ன சூழல் நிலவுகிறது? என்ற நீதிபதிகளின் வினாவுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கிக் கிடப்பதைத் தான் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அவ்வாறு கூறினார் என்பதை புரிந்து கொண்டதாலோ என்னவோ, 4 வாரங்களில் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.
அவர்கள் அளித்த அவகாசம் இம்மாத இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு விரும்பவில்லை என்பதையே அதன் அண்மைக்கால செயல்கள் காட்டுகின்றன. இது மிகவும் மோசமான விளைவுகளை உருவாக்கும்.
மத்திய இடைநிலை கல்விதிட்ட பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அதிரடியான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான ஊதியம், பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட செலவுகளுக்காக மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்; மாணவர்களை சேர்க்க நேர்காணல் நடத்தக்கூடாது, நன்கொடை வசூலிக்கக்கூடாது; மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே சி.பி.எஸ்.இ பள்ளிகளும் வசூலிக்க வேண்டும்.
கல்விக் கட்டணத்தில் பள்ளிச் செலவுகளை மேற்கொண்டது போக மீதமுள்ள நிதியை வேறு எந்த பணிகளுக்கும் திருப்பி விடக்கூடாது; பள்ளி வளர்ச்சிக்காக மட்டுமே செலவிட வேண்டும்; ஆண்டு தோறும் வரவு செலவு கணக்குகளை தங்களின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய இடைநிலை கல்வித்திட்ட வாரியம் (சி.பி.எஸ்.இ) ஆணையிட்டிருக்கிறது.
இந்த விதிகள் மீறப்பட்டால் பள்ளிகளின் வருவாய் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது. ஆனால், தமிழகத்திலோ கல்விக்கட்டண நிர்ணயக் குழுவின் தலைவரை நிர்ணயிப்பதற்கே வழியில்லாத சூழல் காணப்படுகிறது.
இந்த விஷயத்தில் மட்டும் தான் தமிழக அரசின் செயல்பாடு முடங்கிக் கிடக்கிறது என்பதில்லை. சென்னை, அண்ணா, மதுரை காமராஜர் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமனம் செய்தல், தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திற்கு தலைவரை நியமித்தல், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவரை நியமித்தல் என பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இதுவரை நடந்தது நடந்ததாக இருப்பினும், இனிமேல் நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டணக் நிர்ணயக் குழுவுக்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.
அத்துடன், கல்விக் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.